மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட, இலங்கை அணிக்கு எதிரான "டுவென்டி-20' உலக கோப்பை லீக் போட்டியில், தென் ஆப்ரிக்க அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் "சூப்பர்' வெற்றி பெற்றது. பவுலிங், பேட்டிங்கில் ஏமாற்றிய இலங்கை, சொந்த மண்ணில் பரிதாபமாக வீழ்ந்தது.
நான்காவது "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் இலங்கையில் நடக்கிறது. "சி' பிரிவு கடைசி லீக் போட்டியில் இலங்கை, தென் ஆப்ரிக்க அணிகள் மோதின. மழையால் போட்டி துவங்குவதில் தாமதம் ஆனது.
பின், தலா 7 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. "டாஸ்' வென்ற இலங்கை கேப்டன் ஜெயவர்தனா, "பீல்டிங்' தேர்வு செய்தார். தசைப்பிடிப்பு காரணமாக ஜிம்பாப்வேக்கு எதிராக 6 விக்கெட் வீழ்த்திய அஜந்தா மெண்டிஸ் நீக்கப்பட்டு, ஹெராத் சேர்க்கப்பட்டார்.
லீவி "அவுட்':
தென் ஆப்ரிக்க அணிக்கு ரிச்சர்டு லீவி, ஆம்லா துவக்கம் கொடுத்தனர். குலசேகரா வீசிய முதல் ஓவரில் தடுமாறிய லீவி, 4 ரன்னுக்கு அவுட்டானார். மலிங்கா ஓவரில் ஆம்லா, இரண்டு பவுண்டரி விளாசினார். இவர், 9 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
டிவிலியர்ஸ் அதிரடி:
ஹெராத் ஓவரில், தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ், தலா ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். மலிங்கா பந்திலும் சிக்சர் அடித்த டிவிலியர்ஸ் (30 ரன்கள், 13 பந்து) அவரிடமே வீழ்ந்தார்.
சொதப்பிய டுபிளசி 13 ரன்கள் (11 பந்து) எடுத்தார். கடைசி நேரத்தில் பெரேரா ஓவரில், டுமினி அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர் விளாச தென் ஆப்ரிக்க அணி 7 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்தது. டுமினி (15) அவுட்டாகாமல் இருந்தார்.
அசத்தல் பவுலிங்:
கடின இலக்கை துரத்திய இலங்கை அணியை, தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் மார்னே மார்கல், ஸ்டைன் இருவரும் போட்டுத் தாக்கினர். முதலில் தில்ஷன், "டக்' அவுட்டானார். அடுத்து, ஸ்டைன் வேகத்தில் ஜெயவர்தனா 4 ரன்னில் திரும்பினார்.
இருமுறை தப்பிப்பிழைத்த சங்ககராவும் (13) அணியை கைவிட்டார். மீண்டும் அசத்திய ஸ்டைன், பெரேராவை (1) பெவிலியனுக்கு அனுப்பினார். முனவீரா 13 ரன்கள் எடுத்தார்.
இலங்கை அணி 7 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 46 ரன்கள் மட்டும் எடுத்து, 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. திரிமான்னே (5), ஜீவன் மெண்டிஸ் (7) அவுட்டாகாமல் இருந்தனர்.
0 comments:
Post a Comment