டென்னிஸ் சங்கத்துக்கு எதிராக வழக்குத் தொடர மகேஷ் பூபதி முடிவு

இந்திய டென்னிஸ் சங்கம் விதித்துள்ள தடையை எதிர்த்து வழக்குத் தொடர டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.


மகேஷ் பூபதி, ரோஹன் போபண்ணா ஆகியோர் 2014 ஜூன் வரை இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்று அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) தெரிவித்தது.


டென்னிஸ் சங்கம் வலியுறுத்திய நிலையிலும் ஒலிம்பிக் போட்டியில் லியாண்டர் பயஸýடன் சேர்ந்து விளையாட மாட்டோம் என்று இவர்கள் இருவரும் மறுத்ததே இந்த தடைக்குக் காரணம்.


இந்நிலையில் மும்பையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பூபதி இது தொடர்பாகக் கூறியது: இந்தியாவுக்காக போபண்ணா 10 ஆண்டுகள் வரை டென்னிஸ் விளையாடியுள்ளார். நான் 18 ஆண்டுகளாக நாட்டுக்காக போட்டிகளில் பங்கேற்று வருகிறேன்.


இந்நிலையில் எங்களுக்கு எதிராக மிகக் கடுமையாக டென்னிஸ் சங்கம் நடந்து கொண்டுள்ளது. இது ஏற்புடையதே அல்ல. எனவே இது தொடர்பாக எனது தரப்பில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து, முக்கியமாக சட்டரீதியாக இந்த விஷயத்தை அணுகுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறேன். விரைவில் இது தொடர்பாக முடிவை அறிவிப்பேன் என்றார்.


உங்கள் மீதான நடவடிக்கை, டென்னிஸ் சங்கத்தின் பழி வாங்கும் போக்கு என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, "ஆம் அப்படித்தான் நினைக்கிறேன்' என்றார் பூபதி.

0 comments:

Post a Comment