இந்தியா ஹாட்ரிக் சாம்பியன்

நேரு கோப்பை கால்பந்து தொடரில், இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது. நேற்று நடந்த விறுவிறுப்பான பைனலில் கேமரூனை "பெனால்டி ஷூட் அவுட் முறையில் 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

டில்லியில், 15வது நேரு கோப்பை சர்வதேச கால்பந்து தொடர் நடந்தது. நேற்று நடந்த பைனலில் "பிபா ரேங்கிங்கில் 168வது இடத்தில் உள்ள இந்தியா, 59வது இடத்தில் உள்ள பலம் வாய்ந்த ஆப்ரிக்க அணிகளில் ஒன்றான கேமரூன் "பி அணியை சந்தித்தது.


கேமரூன் ஆதிக்கம்:

போட்டியின் துவக்கத்தில் கேமரூன் வீரர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. இவர்கள் அதிக நேரம் பந்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் கிடைத்த "பிரி ஹிக் வாய்ப்பில் இந்திய வீரர் கிலிபோர்டு மிராண்டா "பாஸ் செய்த பந்தை சக வீரர் கவுர்மாங்கி தலையால் முட்டி முதல் கோல் அடித்தார்.

இம்மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் கேமரூன் வீரர் மகோன் தியரி கோல் அடித்து பதிலடி கொடுத்தார். முதல் பாதி 1-1 என சமநிலையில் முடிந்தது.


சுனில் நம்பிக்கை:

இரண்டாவது பாதியில் தொடர்ந்து அசத்திய கேமரூன் அணிக்கு 54வது நிமிடத்தில் "கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. இதில் மகோன் தியரி அடித்த பந்தை கிங்யு மபோன்டோ தலையால் முட்டி கோலாக மாற்றினார். ஆட்டத்தின் 78வது நிமிடத்தில் கோல் அடிக்க, இந்திய கேப்டன் சுனில் சேத்ரி மின்னல் வேகத்தில் பறந்தார்.

இவரை கேமரூன் கோல்கீப்பர் நிகசி ஹோசியா முரட்டுத்தனமாக மடக்கினார். இதையடுத்து "பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனை சுனில் சேத்ரி கோலாக மாற்றி நம்பிக்கை தந்தார்.


கூடுதல் நேரம்:

நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 2-2 என சமநிலை வகித்ததால், கூடுதலாக அரை மணி நேரம் வழங்கப்பட்டது. இதில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால் போட்டியின் முடிவு "பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு சென்றது.


சபாஷ் சுப்ரதா:

இதில் இரு அணியினருக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்படும். போதிய அனுபவமில்லாத கேமரூன் கோல் கீப்பர் நிகசி ஹோசியாவுக்கு எதிராக இந்தியா சார்பில் ராபின் சிங், கேப்டன் சுனில் சேத்ரி, டென்சில் பிரான்கோ, மேத்தா ஹுசைன், கிலிபோர்டு மிராண்டா ஆகியோர் தங்களது வாய்ப்பை கோலாக மாற்றினர்.

கேமரூன் சார்பில் அஷு டாம்பே, அவுஸ்மிலா பாபா, பால் பெபே, கிங்யு மபோன்டோ ஆகியோர் தங்களது வாய்ப்பை கோலாக மாற்றினர். கடைசி வாய்ப்பில், கேமரூன் வீரர் மகோன் தியரி "மிஸ் பண்ண, இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் "பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி பெற்று, கோப்பையை தக்க வைத்துக் கொண்டது.


இளமையின் எழுச்சி:

இந்திய விளையாட்டு அரங்கில், அடுத்த தலைமுறை மிகச் சிறப்பாக உள்ளது. சமீபத்தில் நமது ஜூனியர் கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்றது. இதே போல சுனில் சேத்ரி தலைமையிலான இளம் இந்திய கால்பந்து அணி, நேரு கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது.


இரண்டாவது இடம்

நேரு கோப்பை கால்பந்து அரங்கில் இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாவது முறையாக (2007, 2009, 2012) சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் அதிக முறை கோப்பை வென்ற அணிகள் வரிசையில் இரண்டாவது இடம் பிடித்தது. முதலிடத்தில் நான்கு முறை (1985-88) கோப்பை வென்ற சோவியத் யூனியன் அணி உள்ளது.

* நேரு கோப்பை அரங்கில் "ஹாட்ரிக் பட்டம் வென்ற இரண்டாவது அணி என்ற பெருமை பெற்றது. முன்னதாக சோவியத் யூனியன் அணி தொடர்ந்து நான்கு முறை கோப்பை வென்றது.

0 comments:

Post a Comment