இலங்கையில் உலக கோப்பை டுவென்டி-20 அதிரடி ஆரம்பம்

கண் இமைக்கும் நேரத்தில் காட்சிகள் மாறும் "டுவென்டி-20 உலக கோப்பை தொடர் இன்று ஆரம்பமாகிறது. இதில், ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடிக்கப்படும் அதிசயம் அரங்கேறலாம். மடமடவென விக்கெட்டுகள் சரிவதையும் காணலாம்.

ஒவ்வொரு போட்டியிலும், கடைசி பந்து வரை "டென்ஷன் எகிறும் என்பதால், உலக ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கலாம்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் நான்காவது "டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் இன்று முதல் அக்., 7ம் தேதி வரை நடக்கிறது. இத்தொடர் ஆசிய மண்ணில் முதன்முறையாக நடக்க உள்ளது சிறப்பம்சம். 20 நாட்கள் நடக்கும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 12 அணிகள் பங்கேற்கின்றன.


இந்தியா தயார்:

இம்முறை கோப்பை வெல்ல கடும் போட்டி காணப்படுகிறது. ஒருநாள் அரங்கில் நடப்பு உலக சாம்பியனான இந்திய அணி, "டுவென்டி-20 உலக கோப்பையை மீண்டும் கைப்பற்ற தயாராக உள்ளது. போட்டிகள் நமக்கு பரிச்சயமான இலங்கை மண்ணில் நடப்பது சாதகமான விஷயம்.

கடந்த 2007ல் முதலாவது "டுவென்டி-20 உலக கோப்பையை இந்திய அணி வென்றது. அப்போதைய அணியில் இருந்த காம்பிர், தோனி, யுவராஜ், ரோகித் சர்மா, இர்பான் பதான், ஹர்பஜன், சேவக், பியுஸ் சாவ்லா ஆகிய 8 பேர் இம்முறையும் இடம் பெற்றிருப்பதால் அனுபவத்திற்கு பஞ்சமில்லை.
இந்திய அணியின் மிகப் பெரும் பலம் கேப்டன் தோனி தான்.

இவரது புதுமையான திட்டங்கள் கைகொடுத்தால் மீண்டும் அசத்தலாம். கடந்த 2007ல் பாகிஸ்தானுக்கு எதிரான பைனலில் கடைசி ஓவரை யாருமே எதிர்பார்க்காத வகையில் ஜோகிந்தர் சர்மாவை வீசச் சொன்னார். இது பலன் தர, இந்தியா கோப்பை வென்றது. இது போன்ற உத்திகளை இவரிடம் இருந்து எதிர்பார்க்கலாம். பேட்டிங், கீப்பிங்கிலும் கைகொடுப்பார்.

துவக்கத்தில் காம்பிர், சேவக் ஜோடி மிரட்டலாம். இவர்களுக்கு இடையிலான "கெமிஸ்டிரி சிறப்பாக உள்ளது. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு பேட் செய்கின்றனர். "மிடில் ஆர்டரில் விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா உள்ளனர். ஐ.பி.எல்., தொடரில் அசத்திய இவர்கள் அணியின் முதுகெலும்பாக உள்ளனர். "சூப்பர் பார்மில் உள்ள கோஹ்லி தொடர்ந்து நம்பிக்கை தருகிறார்.


யுவராஜ் நம்பிக்கை:

"கேன்சர் பாதிப்பில் இருந்து மீண்ட யுவராஜ் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது. ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடிக்கும் திறமை படைத்த இவர், இலங்கை மண்ணிலும் அசத்துவார். இர்பான் பதான் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சுழலுக்கு ஏற்ற இலங்கை ஆடுகளத்தில் அஷ்வின், ஹர்பஜன், பியுஸ் சாவ்லா மிரட்டலாம். "வேகத்துக்கு ஜாகிர் கான், உமேஷ் யாதவ், தமிழக வீரர் பாலாஜி, டிண்டா உள்ளனர்.

"டுவென்டி-20 போட்டியில் பகுதி நேர பந்துவீச்சாளர்கள் பணி மகத்தானது. எனவே, சேவக், யுவராஜ், ரெய்னா, ரோகித் சர்மா, மனோஜ் திவாரி போன்றவர்களும் கைகொடுக்கலாம். இந்தியா "சூப்பர்-8 சுற்றுக்கு எளிதில் முன்னேறி விடும். இதற்கு பின் கவனமாக செயல்பட்டால், கோப்பை நமதே.


கெய்ல் "புயல்:

கோப்பை வெல்லக்கூடிய மற்ற அணிகளில் வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை வகிக்கிறது. அணியில் பெரும்பாலான வீரர்கள் ஐ.பி.எல்., தொடரில் அசத்தியவர்கள் என்பது பலம். கிறிஸ் கெய்ல், போலார்டு, டுவைன் பிராவோ, ஆன்ட்ரி ரசல் போன்றவர்கள் அதிரடி ஆட்டத்தில் கெட்டிக்காரர்கள்.

கோல்கட்டா அணி சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்த சுனில் நரைன் சுழலில் அசத்தலாம். கேப்டன் சமி தனது படையை சரியாக வழிநடத்தினால் சாதிக்க வாய்ப்பு உண்டு.

அடுத்து தென் ஆப்ரிக்க அணி. கேப்டன் டிவிலியர்ஸ், காலிஸ், டுபிளசிஸ், ரிச்சர்டு லெவி, ஆல்பி, மார்னே மார்கல், பார்னல், ஸ்டைன் என அணியின் பெரும்பாலான வீரர்கள் ஐ.பி.எல்., தொடரில் ஹீரோக்களாக வலம் வந்தவர்கள். இந்த அனுபவத்தை பயன்படுத்தினால், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றலாம்.

0 comments:

Post a Comment