மெக்கலம் உலக சாதனை! - சூப்பர் சதம் விளாசினார்


வங்கதேசத்துக்கு எதிரான "டுவென்டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் விஸ்வரூபம் எடுத்தார் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம். 123 ரன்கள் விளாசிய இவர், "டுவென்டி-20' அரங்கில் இரண்டு சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். 

தவிர, ஒரே இன்னிங்சில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையும் பெற்றார். இப்போட்டியில் நியூசிலாந்து அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. வங்கதேச அணி ஏமாற்றம் அளித்தது.

இலங்கையில் நான்காவது "டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பல்லேகெலேயில் நேற்று நடந்த "டி' பிரிவு லீக் போட்டியில் நியூசிலாந்து, வங்கதேச அணிகள் மோதின. "டாஸ்' வென்ற வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம், "பீல்டிங்' தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணிக்கு துவக்கக்தில் கப்டில் (11) ஏமாற்றினார். பின் பிராங்க்ளின், பிரண்டன் மெக்கலம் ஜோடி அசத்தியது. இரண்டாவது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்த போது, மொர்டசா "வேகத்தில்' பிராங்க்ளின் (35) அவுட்டானார்.


சிக்சர் மழை:

வங்கதேச பந்துவீச்சை அடித்து நொறுக்கிய மெக்கலம் அதிவிரைவாக ரன் சேர்த்தார். ஜியாவுர் ரஹ்மான் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அரைசதம் அடித்தார். தொடர்ந்து சாகிப் , மொர்டசா, ஷபியுல் இஸ்லாம், எலியாஸ், அப்துர் ரசாக் பந்துகளில் சிக்சர் மழை பொழிந்தார். எலியாஸ் சன்னி வீசிய ஆட்டத்தின் 19வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த மெக்கலம், "டுவென்டி-20' அரங்கில் தனது இரண்டாவது சதம் அடித்தார்.

அப்துர் ரசாக் வீசிய ஆட்டத்தின் கடைசி பந்தை சிக்சருக்கு அனுப்ப முயன்ற மெக்கலம் (123), தமிம் இக்பாலின் துடிப்பான "கேட்ச்' மூலம் அவுட்டானார். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 191 ரன்கள் குவித்தது. கேப்டன் ராஸ் டெய்லர் (14) அவுட்டாகாமல் இருந்தார். 

தமிம் ஏமாற்றம்:

கடின இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் (0) ஏமாற்றினார். அடுத்து வந்த சாகிப் அல் ஹசன் (11), கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் (4) நிலைக்கவில்லை. மற்றொரு துவக்க வீரர் முகமது அஷ்ரபுல் (21), மகமதுல்லா (15) பெரிய அளவில் சோபிக்கவில்லை.

நாசிர் அரைசதம்:

"மிடில்-ஆர்டரில்' களமிறங்கிய நாசிர் ஹொசைன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜேக்கப் ஓரம் பந்தில் அடுத்தடுத்து ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த நாசிர், டிம் சவுத்தி பந்தை பவுண்டரிக்கு விரட்டி, தனது இரண்டாவது அரைசதத்தை பதிவு செய்தார். இவர், 50 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அடுத்து வந்த மொர்டசா (5), எலியாஸ் சன்னி (5) ஏமாற்ற, வங்கதேச அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 132 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. ஆட்ட நாயகன் விருதை பிரண்டன் மெக்கலம் பெற்றார்.

முதல் வீரர் 

நேற்று 123 ரன்கள் எடுத்த பிரண்டன் மெக்கலம், "டுவென்டி-20' அரங்கில் இரண்டு முறை சதம் அடித்த முதல் வீரரானார். முன்னதாக இவர், 2010ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த போட்டியில் 116* ரன்கள் எடுத்தார்.

* இது, சர்வதேச "டுவென்டி-20' வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட 8வது சதம். ஏற்கனவே தென் ஆப்ரிக்காவின் ரிச்சர்டு லீவி (117*, எதிர்-நியூசிலாந்து, 2012), வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (117, எதிர்-தென் ஆப்ரிக்கா, 2007), இலங்கையின் தில்ஷன் (104*, எதிர்-ஆஸ்திரேலியா, 2011), இந்தியாவின் சுரேஷ் ரெய்னா (101, எதிர்-தென் ஆப்ரிக்கா, 2010), இலங்கையின் மகிளா ஜெயவர்தனா (100, எதிர்-ஜிம்பாப்வே, 2010), ஸ்காட்லாந்தின் பெர்ரிங்டன் (100, எதிர்-வங்கதேசம், 2012) ஆகியோர் தலா ஒரு சதம் அடித்தனர்.

* இது, "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் பதிவு செய்யப்பட்ட நான்காவது சதம். முன்னதாக கெய்ல் (2007), ரெய்னா (2010), ஜெயவர்தனா (2010) ஆகியோர் இச்சாதனை படைத்திருந்தனர். தவிர இது, நான்காவது "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் பதிவு செய்யப்பட்ட முதல் சதம்.

* "டுவென்டி-20' அரங்கில், ஒரு இன்னிங்சில் அதிக ரன்களை பதிவு செய்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார் மெக்கலம். தலா 117 ரன்கள் எடுத்த ரிச்சர்டு லீவி (தென் ஆப்ரிக்கா), கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோர் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டனர். தவிர இது, "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் ஒரு இன்னிங்சில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ரன்.

* இப்போட்டியில் 51 பந்தில் சதம் அடித்த மெக்கலம், "டுவென்டி-20' அரங்கில் அதிவேக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் நான்காவது இடம் பிடித்தார். முதல் மூன்று இடங்களில் தென் ஆப்ரிக்காவின் ரிச்சர்டு லீவி (45 பந்து), வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (50 பந்து), நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் (50 பந்து) ஆகியோர் உள்ளார். தவிர இது, "டுவென்டி-20' உலக கோப்பை அரங்கில் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது அதிவேக சதம். ஏற்கனவே 2007ல் கெய்ல் 50 பந்தில் சதம் அடித்தார்.


சிக்சர் மன்னன்

வங்கதேச அணிக்கு எதிராக மொத்தம் 7 "சிக்சர்' அடித்த நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம், சர்வதேச "டுவென்டி-20' அரங்கில் அதிக "சிக்சர்' விளாசிய வீரர்கள் வரிசையில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். இதுவரை 49 போட்டியில் 64 "சிக்சர்' அடித்துள்ளார். இவரை அடுத்து ஆஸ்திரேலியாவின் வாட்சன் (50 சிக்சர்), டேவிட் வார்னர் (46), வெஸ்ட் இண்டீசின் கெய்ல் (43), இந்தியாவின் யுவராஜ் சிங் (41) ஆகியோர் உள்ளனர்.

தொடரும் சோகம்

நியூசிலாந்துக்கு எதிராக 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த வங்கதேச அணி, "டுவென்டி-20' உலக கோப்பை அரங்கில் தொடர்ந்து ஒன்பதாவது தோல்வியை பெற்றது. கடந்த 2007ல் நடந்த முதலாவது "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்திய வங்கதேச அணி, அதன்பின் தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான் அணிகளிடம் தோல்வி அடைந்தது. 

2009ல் இந்தியா, அயர்லாந்து அணிகளிடம் வீழ்ந்தது. கடந்த 2010ல் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளிடம் தோற்றது. இம்முறை நியூசிலாந்திடம் தோல்வி அடைந்து தோல்வி பயணத்தை தொடர்கிறது.

0 comments:

Post a Comment