ஒருநாள் போட்டியில் இந்தியா தான் உலக சாம்பியன். இதே போல 20 ஓவர் உலக கோப்பை தொடரிலும் சிறப்பாக செயல்படுவது மிகவும் முக்கியம். அணியின் இளம் வீரர்கள் சாதிக்க காத்திருப்பதால், மீண்டும் "டுவென்டி-20' உலக கோப்பையை கைப்பற்றுவோம்,''என, இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்தார்.
உலக கோப்பை "டுவென்டி-20' தொடர் இலங்கையில் செப்., 18 முதல் அக்., 7 வரை நடக்கவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை (செப்., 19) சந்திக்கிறது.
கடந்த 2007ல் "டுவென்டி-20' உலக கோப்பை வென்ற இந்திய அணி, மீண்டும் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கேப்டன் தோனி கூறியது:
டெஸ்ட் போட்டிகளில் இருந்து "டுவென்டி-20' ஆட்டத்துக்கு ஏற்ப, திடீரென மாறுவது சிரமம் தான். ஏனெனில், டெஸ்ட் போட்டிகளில் "வைடாக' பந்து வீசினால் உதிரியாக அதிக ரன்கள் போகாது. ஆனால், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' எனில் "ஆப் அல்லது லெக் ஸ்டம்பில்' இருந்து சற்று விலகிச் சென்றாலும் "வைடாகி' விடும்.
அதேநேரம், தொழில் ரீதியிலான கிரிக்கெட் வீரர்களான நாங்கள் விரைவில் "அட்ஜஸ்ட்' செய்து கொள்வோம். இந்திய வீரர் சேவக், மூன்று வகை கிரிக்கெட்டிலும் எப்போதும் அசத்தும் திறமை பெற்றுள்ளார்.
வேறுபடுத்த நேரமில்லை:
தற்போது, 50 ஓவர் போட்டியில் நாங்கள் தான் உலக சாம்பியன். எங்களுக்கு இந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் முக்கியமானது. இதனால், டெஸ்ட், ஒருநாள் என்று வேறுபடுத்தி பார்த்துக் கொண்டிருக்க நேரமில்லை. இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டு கோப்பை வெல்ல முயற்சிப்போம்.
அணியின் "பேட்டிங் ஆர்டர்' பலமாக உள்ளது. தவிர, "டாப்' பேட்ஸ்மேன்கள் சிலர், "பார்ட்-டைம்' பவுலராவும் சிறப்பாக செயல்படுகின்றனர். இது "டுவென்டி-20' கிரிக்கெட்டுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
சாம்பியன் வீரர்:
தேர்வாளர்கள் உணர்ச்சி வசப்பட்டு அணியில் யுவராஜ் சிங்கை சேர்த்து விட்டனர் என்ற கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. ஏனெனில், இது தேர்வாளர்கள் பிரச்னை. ஆனால், "மேட்ச் வின்னர்' மற்றும் சாம்பியன் வீரரான இவர், இடம் பெற்றது எனக்கு மகிழ்ச்சி. "டுவென்டி-20' அணியில் ஐந்தாவது பவுலர் இடம் பெற முடியாத நிலையில், யுவராஜ் வருகை இதை சமன் செய்துள்ளது.
ஏனெனில், இந்திய அணியின் சரியான "ஆல்-ரவுண்டர்கள்' இல்லை. வேறு வழியில்லாததால் பேட்ஸ்மேன்களான "பார்ட்-டைம்' பவுலர்களை நம்ப வேண்டியதுள்ளது. விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, ரெய்னா வரிசையில் யுவராஜ் சிங்கும் இதில் இடம் பெற்றுவிட்டார். இதில் ஒவ்வொருவரும் ஒரு ஓவர் வீசினால் கூட, ஐந்தாவது பவுலர் குறை நீங்கிவிடும்.
மாறிய ஆடுகளம்:
கடந்த சில ஆண்டுகளாக இலங்கையின் ஆடுகளங்கள் அதிகமாக மாறிவிட்டது. 2005ல் வந்த போது இருந்ததை விட, இப்போது ஏகப்பட்ட மாற்றங்கள் உள்ளன. சமீபத்திய இலங்கை தொடரில் சுழலுக்கு ஆடுகளங்கள் ஒத்துழைக்கவில்லை. உலக கோப்பை தொடரில் சில மைதானங்களில் மட்டும் போட்டி நடக்கிறது.
இதனால், ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக மாறும் என நம்புகிறேன். சூழ்நிலைக்கு ஏற்ப, போட்டியில் திட்டமிட்டுக் கொள்வோம். சர்வதேச கிரிக்கெட் தொடரில் எந்த அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம்.
இவ்வாறு தோனி கூறினார்.
0 comments:
Post a Comment