நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது "டுவென்டி-20 போட்டியில், இந்திய அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, இரண்டு "டுவென்டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. விசாகப்பட்டனத்தில் நடக்க இருந்த முதல் போட்டி, மழை காரணமாக, ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தானது.
இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி, இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதில் "டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, "பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் காயம் காரணமாக சேவக் சேர்க்கப்படவில்லை.
நியூசிலாந்து அணியின் நிகோல் "டக் அவுட்டானார். அடுத்து கப்டில் ஒரு ரன்னுக்கு திரும்பினார். நியூசிலாந்து அணி 2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 6 ரன்கள் எடுத்திருந்தது. வில்லியம்சன் 28 ரன்கள் எடுத்தார். அதிரடியில் மிரட்டிய மெக்கலம், 91 ரன்னுக்கு அவுட்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். பிராங்க்ளின் (1) நிலைக்கவில்லை.
நியூசிலாந்து அணி 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்திருந்தது.
ஜேக்கப் ஓரம் (18), ராஸ் டெய்லர் (25) அவுட்டாகாமல் இருந்தனர்.
கோஹ்லி அரைசதம்:
கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு காம்பிர் (3) ஏமாற்றம் தந்தார். ரெய்னா (27) நிலைக்கவில்லை. விராத் கோஹ்லி(70) அரைசதம் அடித்தார். யுவராஜ் சிங் (34) ஓரளவு கைகொடுத்தார்.
கடைசி நேரத்தில் இந்திய கேப்டன் தோனி மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட "டுவென்டி-20 தொடரை, 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வென்றது.
0 comments:
Post a Comment