நான் துரோகியா? - பூபதி ஆவேசம்

எங்களை துரோகியாக சித்தரிக்கின்றனர். இதை ஏற்கமுடியாது, சட்டரீதியாக எதிர் கொள்வேன்,'' என, இந்திய டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி தெரிவித்தார்.

லண்டன் ஒலிம்பிக் டென்னிசில் லியாண்டர் பயசுடன் சேர்ந்து விளையாட மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா மறுத்தனர். இதனால் டேவிஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டனர். தவிர, வரும் 2014, ஜூன் 30ம் தேதி வரை தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து பூபதி கூறியது:

அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏ.ஐ.டி.ஏ.,) சங்கம் சர்வாதிகார போக்குடன் நடக்கிறது. இதன் தலைவர் அனில் கன்னா, பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்கியுள்ளார். பயஸ் தோளில் ஏறிக் கொண்டு, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, எனக்கு எதிராக பல முறை செயல்பட்டார். இதனை எனக்கும், பயசிற்கும் இடையிலான மோதலாக, "மீடியா' செய்தி வெளியிட்டது துரதிருஷ்டவசமானது.


எதுவும் தெரியாது:

இந்தியாவுக்காக விளையாடவே எப்போதும் விரும்புவேன். சமீபத்திய டேவிஸ் கோப்பை தொடருக்காக தயாராகவே இருந்தேன். ஆனால், ஏ.ஐ.டி.ஏ.,யில் இருந்து யாரும், எதுவும் சொல்லவில்லை. எங்களுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து "மீடியா' நண்பர்கள் மூலம் வந்த "இ-மெயில்' மூலமாகத் தான் தெரிந்தது.


தலையிட வேண்டும்:

நாங்கள் லண்டன் ஒலிம்பிக்கில் தோற்றதை நிறைய பேர் கொண்டாடினர். இவ்விஷயத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஒ.ஏ.,) அல்லது மத்திய விளையாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பெரும் இடைஞ்சல்:

டென்னிஸ் தான் எனக்கு அனைத்தும் கொடுத்தது. கடவுளின் கருணையினால், இப்போட்டியின் வளர்ச்சிக்கு நிறைய உதவிகள் செய்யும் தகுதியை பெற்றுள்ளேன். பல்வேறு தொடர்களை நடத்துகிறேன். டென்னிஸ் மைதானங்கள் கட்டியுள்ளேன்.

ஆனால், ஒவ்வொரு முயற்சிக்கும் ஏதாவது இடைஞ்சல் செய்வர். அவர்கள் அனுமதியின்றி எதுவும் செய்ய முடியாது. இளம் வீரர்களை உருவாக்கும் முயற்சிக்கு பெரும் தடையாக அனில் கன்னா உள்ளார்.

ஒலிம்பிக் தேர்வுக்கு இரு வாரத்துக்கு முன், பிரெஞ்ச் ஓபன் தொடரை நானும், சானியாவும் வென்றோம். அடுத்த இரு நாட்களில் லண்டனில் இருவரும் சேர்ந்து விளையாட முடியாது என்கின்றனர்.


அனில் ஆதிக்கம்:

அனைத்து முடிவுகளையும் அனில் கன்னா மட்டும் எடுக்கிறார். கடைசியில் டென்னிஸ் சங்கம் மீது காரணம் சொல்கிறார். இந்த அமைப்பு ஒருநபர் கமிட்டி போல செயல்படுகிறது. நீண்ட நாட்களாக டென்னிஸ் போட்டி இப்படித்தான் நிர்வகிக்கப்படுகிறது. இதில் பயசை குற்றம் சொல்ல முடியாது. இதனால் எதிர்கால இந்திய டென்னிசிற்கு பெரும் சிக்கல் தான்.


துரோகியா:

கடைசியில், தடை விதித்து துரோகியாக சித்தரிக்கின்றனர். இதை ஏற்க முடியாது. இதை சட்டரீதியாக எதிர்கொள்வேன். இதற்கான முயற்சியில் எனது வக்கீல்கள் ஈடுபட்டுள்ளதால், இதுகுறித்து மேலும் எதுவும் தெரிவிக்க முடியாது.
இவ்வாறு பூபதி தெரிவித்தார்.


போபண்ணா பாவம்

போபண்ணா குறித்து பூபதி கூறுகையில்,"" போபண்ணாவுடன் இரட்டையரில் விளையாட, பாகிஸ்தானின் குரேஷி போல, நல்ல இளம் "பார்ட்னர்' தேவைப்படுகிறது. இன்னும் பல ஆண்டுகள் விளையாட வேண்டியதால், அவரை இந்தப் பிரச்னையில் இழுக்க விரும்பவில்லை. இதிலிருந்து அவர் விலகி இருக்க வேண்டும்,'' என்றார்.


கடைசி போட்டி

இரட்டையர் பிரிவில் அசத்தி வரும் பூபதி, 38, இதுவரை 12 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். தற்போது 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதால், இவரது டென்னிஸ் வாழ்க்கை அனேகமாக முடிவுக்கு வந்துள்ளது.

இது குறித்து பூபதி கூறுகையில்,""இரண்டு ஆண்டுகள் தடை என்பது மிக நீண்ட காலம். எனவே நாட்டுக்காக கடைசி போட்டியில் விளையாடி முடித்து விட்டேன் என நினைக்கிறேன். ஆனாலும் 2013 வரை விளையாட விருப்பம் உண்டு,'' என்றார்.

0 comments:

Post a Comment