இந்திய வீரர்கள் தேர்வில் குழப்பம்


டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் "சூப்பர்-8' சுற்றுக்கு இந்திய அணி ஆயத்தமாகிறது. இதில், 7 பேட்ஸ்மேன்கள் "பார்முலாவை' தொடர்வதா அல்லது 5 பவுலர்களுடன் களமிறங்குவதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. சேவக்கிற்கு ஏற்பட்டுள்ள காயமும் சிக்கலை அதிகரித்துள்ளது.

 நான்காவது உலக கோப்பை "டுவென்டி-20' தொடர் இலங்கையில் நடக்கிறது. லீக் போட்டிகள் முடிந்து இன்று ஓய்வு நாள். நாளை முதல் "சூப்பர்-8' சுற்று போட்டிகள் துவங்குகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் வரும் 28ம் தேதி ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. 

சேவக் சந்தேகம்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், விளையாடும் 11 வீரர்களை தேர்வு செய்வதில் பெரும் குழப்பம் நிலவுகிறது. விரல் பகுதியில் காயம் அடைந்த சேவக்கிற்கு இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டது. 

நேற்று மூன்று மணி நேரம் நடந்த பயிற்சியிலும் இவர் பங்கேற்கவில்லை. அதே நேரத்தில் இர்பான் பதான் "பேட்டிங்' பயிற்சி மேற்கொண்டார். இது அடுத்த போட்டியில் சேவக் இடம் பெறுவாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இவருக்கு பதிலாக மீண்டும் இர்பான், துவக்க வீரராக களமிறக்கப்படலாம். இது குறித்து இந்திய அணியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில்,""சேவக் நல்ல உடற்தகுதியுடன் தான் உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு முன் இவரது காயத்தின் தன்மை அதிகரித்து விடக் கூடாது என்பதற்காகவே ஓய்வு அளிக்கப்பட்டது,''என்றார். 

ஹர்பஜன் உறுதி:

இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் ஹர்பஜன், 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 7 பேட்ஸ்மேன்கள் "பார்முலாவை' கைவிட்டு 5 பவுலர்களுடன் களமிறங்கலாம் என்ற கருத்து இந்திய அணியில் எழுந்துள்ளது. 

ஆஸ்திரேலிய அணியை எப்போதும் அச்சுறுத்தும் ஹர்பஜனை தவிர்க்க இயலாது. வார்னர், மைக்கேல் ஹசி போன்ற இடது கை பேட்ஸ்மேன்களை சமாளிக்க இவர் கட்டாயம் இடம் பெற வேண்டும். தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் வாய்ப்பு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பியுஸ் சாவ்லா இடம் கேள்விக் குறியாகிறது. 

பாலாஜிக்கு சிக்கல்:

 அணியில் ஜாகிர் கான் வேண்டும் என, தோனி விரும்பினால், மீண்டும் ஐந்து பவுலர்களுடன் களம் காணலாம். ஜாகிர் வருகையால் பாலாஜி விளையாடும் லெவனில் இடம் பெறுவது சந்தேகம் தான். மொத்தத்தில் வீரர்கள் தேர்வு இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக உள்ளது.

0 comments:

Post a Comment