ஐ.பி.எல்., மதிப்பு ரூ. 18 ஆயிரம் கோடி!

ஐ.பி.எல்., அமைப்பு வர்த்தக ரீதியாக அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. இதன் நிறுவன மதிப்பு இந்த ஆண்டு 18 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் இடம் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்சின் மதிப்பு அதிகபட்சமாக ரூ. 220 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) அமைப்பு கடந்த 2008ல் துவங்கப்பட்டது. இதன் நிறுவன மதிப்பு ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. தற்போதைய வருமானம், எதிர்காலத்தில் கிடைக்கும் வருமானம், சர்வதேச சந்தையில் உள்ள அந்தஸ்து போன்றவற்றை அடிப்படையாக கொண்டு நிறுவனத்தின் மதிப்பு கணக்கீடு செய்யப்படுகிறது.

இதன்படி கடந்த ஆண்டை காட்டிலும் ஐ.பி.எல்., அமைப்பின் மதிப்பு இரு மடங்காக உயர்ந்து, 18 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.

சென்னை முதலிடம்: சென்ன சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆண்டு நிறுவன மதிப்பீட்டு பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. இந்த அணியின் மதிப்பு அதிகபட்சமாக 220 கோடி ரூபாயை எட்டியுள்ளது. பாலிவுட் நட்சத்திரம் ஷாருக் கானின் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி இரண்டாவது இடம்(ரூ. 210 கோடி) பெறுகிறது.

நடிகை ஷில்பா ஷெட்டியின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்றாவது இடத்தை(ரூ. 205 கோடி) பெற்றுள்ளது. அடுத்த இடங்களில் தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்(ரூ. 190 கோடி), ரிலையன்ஸ் முகேஷ் அம்பானியின் மும்பை இந்தியன்ஸ்(ரூ. 185 கோடி), டில்லி டேர்டெவில்ஸ் (ரூ. 184 கோடி), நடிகை பிரித்தி ஜிந்தாவின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (ரூ. 164 கோடி), டெக்கான் சார்ஜர்ஸ்(ரூ. 156 கோடி) அணிகள் உள்ளன.


எகிறும் வருமானம்: சமீபத்திய ஏலத்தில் கொச்சி(ரூ. 1,533 கோடி), புனே(ரூ. 1,702 கோடி) ஆகிய இரண்டு புதிய அணிகள் அதிக விலைக்கு வாங்கப்பட்டன. இதனால் ஐ.பி.எல்., அமைப்புக்கு அதிரடியாக 3 ஆயிரத்து 235 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது.

ஒவ்வொரு போட்டிக்கும் விளம்பரங்கள் அதிகம் வருவதால், இந்திய விளம்பர உலகிற்கு மட்டும் ஆயிரம் கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பும் சோனி "டிவி'க்கு இந்த ஆண்டு விளம்பரம் மூலம் 700 கோடி ரூபாய் கிடைக உள்ளது. இப்படி, எங்கு பார்த்தாலும் "கோடிகள்' புரள்வதால், ஐ.பி.எல்., மற்றும் அதன் அணிகளின் நிறுவன மதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

சர்வதேச விளையாட்டு வர்த்தகத்தில் பாரம்பரியமிக்க இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து அமைப்பின் நிறுவன மதிப்பு ரூ. 60 ஆயிரம் கோடியாக உள்ளது. ஐ.பி.எல்., அமைப்பு துவங்கிய மூன்று ஆண்டுகளில் 18 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது ஆச்சரியம் அளிக்கும் விஷயமே.

பி.டி.உஷா ஆதங்கம்

வர்த்தக நோக்கத்தில் நடக்கும் ஐ.பி.எல்., தொடரால், இந்தியாவில் மற்ற விளையாட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக முன்னாள் நட்சத்திரங்கள் எச்சரித்துள்ளனர். "தங்க மங்கை' பி.டி.உஷா கூறுகையில்,""ஐ.பி.எல்., அமைப்பில் பணத்தை முதலீடு செய்தவர்கள் லாபத்தை மட்டுமே இலக்காக கொண்டுள்ளனர். இதனால் விளையாட்டு மீதான ஆர்வம் சுத்தமாக தொலைந்து விட்டது. தடகளத்துக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சிகளுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

முன்னாள் நீச்சல் சாம்பியன் வில்சன் செரியன் கூறுகையில்,""ஐ.பி.எல்., என்பது விளையாட்டல்ல; வெறும் வியாபாரம். இதனால் சந்தோஷ் கால்பந்து உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வாலிபால் மைதானங்களில் கூட கிரிக்கெட் விளையாடுவதை காண முடிகிறது. இந்த நிலை மாற வேண்டும்,''என்றார்.

0 comments:

Post a Comment