ஐ.பி.எல்., அணிகள் ஏலம் திடீர் ரத்து

வரும் 2011 ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க இருக்கும் புதிய அணிகளை, தேர்வு செய்யும் ஏலம் திடீரென ரத்து செய்யப்பட்டது. மார்ச் 21ல் சென்னையில் புதிய ஏலம் நடக்கும் என இதன் தலைவர் லலித் மோடி அறிவித்துள்ளார்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக "டுவென்டி-20' போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. வரும் மார்ச் 12ல் துவங்கும் மூன்றாவது தொடரில், எட்டு அணிகள் பங்கேற்க உள்ளன. வரும் 2011 "டுவென்டி-20' தொடரில் புதிய இரண்டு அணிகளை சேர்க்க, நேற்று மும்பையில் <ஏலம் நடப்பதாக இருந்தது.

இதற்காக ஒவ்வொரு அணிக்கும் குறைந்த பட்ச ஏலத்தொகை 1100 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அதாவது கடந்த 2008ல் அதிக ஏலத்துக்கு சென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் விலையை விட இரு மடங்காக இருந்தது.

தவிர, ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் முன்பணமாக 460 கோடி ரூபாய் கட்ட வேண்டும் என்பது போன்ற கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. எப்படியும் ஒவ்வொரு அணியும் குறைந்தது 1400 கோடி ரூபாய் வரை செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதில் கலந்து கொள்ள பாலிவுட் நடிகை கரீனா கபூர், சையப் அலி கான் போன்றவர்கள் வந்திருந்தனர். ஆனால் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக நடந்த, ஐ.பி.எல்., நிர்வாகக்குழு கூட்டத்தின் முடிவில், புதிய அணிகளுக்கான ஏலத்தை ரத்து செய்வதாக, லலித் மோடி அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறியது:

ஏலம் ரத்து செய்யப்பட்டது ஏமாற்றம் தான். ஆனால் இது நிர்வாகக்குழு எடுத்த முடிவு. புதிய அணிகளை வாங்குவதற்கு பலர் ஆர்வம் தெரிவித்து இருந்தனர். ஆனால் ஏலம் ரத்தானதால், இதற்காக வந்த ஒப்பந்த புள்ளிகள், அவர்களிடமே திருப்பித் தரப்பட்டது. ஏலம் குறித்து புதிய அறிவிப்பு நாளை வெளியிடப்படும்.

புதிய ஒப்பந்த புள்ளி எங்களுக்கு மார்ச் 21, காலை 10 மணிக்குள் அனுப்ப வேண்டும். அன்று காலை 11 மணிக்கு சென்னையில் நடக்கும் புதிய ஏலத்தில் அணிகள் அறிவிக்கப்படும். புதிய ஏலத்தில் முன்பிருந்த சில விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. இதன்படி முன்பணமாக 460 கோடி செலுத்துவதற்கு பதில், 46 கோடி ரூபாய் செலுத்தினால் போதுமானது.

இவ்வாறு மோடி தெரிவித்தார்.

காரணம் என்ன?

நேற்று நடக்க இருந்த ஏலத்தில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு இருந்தது. இதனால் தான் லண்டனை சேர்ந்த மெரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.,), மலையாள நடிகர் மோகன்லால், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் <உள்ளிட்டோர் ஏற்கனவே ஏலத்தில் இருந்து விலகினர்.

தவிர, நேற்று மொத்தம் மூன்று பேர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள தயாராக இருந்தனர். இதனால் ஏலம் ரத்தானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment