ஏமாற்றம் அளித்த ஐ.பி.எல்., துவக்க விழா

ஐ.பி.எல்., துவக்க விழா எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. வெளிநாட்டு பாடகர்கள் சிலர் ஏனோதானோ என பாடிவிட்டுச் சென்றதால், ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதன் துவக்க விழா நேற்று மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்தது. முதலில் கில்கிறிஸ்ட், கங்குலி, தோனி உள்ளிட்ட 8 அணிகளின் கேப்டன்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

பின் "பாப்' நட்சத்திரங்களான அலி கேம்பல், பிஜோர்ன் அகேன், லயோனல் ரிச்சி ஆகியோர் புரியாத ஆங்கிலத்தில் ஏதோ பாட, ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாலிவுட் நாயகி தீபிகா படுகோனே பெயரளவுக்கு வந்து போனார். இவர் சிறிது நேரம் மட்டுமே ஆடினார். ஆஸ்கார் விருது வென்ற "ஜெய் ஹோ' பாடல் பின்னணியில் ஒலிக்க, "லேசர் ஷோ' மூலம் கிரிக்கெட் வீரர்களின் ஆட்டத்தை திரையில் காண்பித்தது மட்டும் ரசிக்கும்படியாக இருந்தது.

இறுதியில் நடந்த வாணவேடிக்கை கூட கண்ணை கவரும் வகையில் அமையவில்லை. கடந்த முறை தென் ஆப்ரிக்காவில் நடந்த துவக்க விழாவோடு ஒப்பிடுகையில், இம்முறை விழா சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை.


மாணவர்கள் பாதிப்பு

ஐ.பி.எல்., போட்டிகள் தேர்வு நேரத்தில் நடப்பதால் மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான போட்டிகள் இரவு 8 மணிக்கு துவங்குவதால் இரவில் கண் விழித்து போட்டிகளை பார்க்க நேரிடுகிறது. இதனால் மாணவர்களின் தூக்கம் பாதிக்கப்பட்டு, படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.


கோஷ்டி மோதல்: பவார் புறக்கணிப்பு

ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி மற்றும் இந்திய கிரிக்கெட் போர்டு நிர்வாகிகள் இடையே மோதல் போக்கு தொடர்கிறது. துவக்க விழாவுக்கு மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கவில்லை.

தவிர முன்னாள் டெஸ்ட் வீரர்களுக்கு போட்டிக்கான இலவச "பாஸ்' எதுவும் அளிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மும்பை கிரிக்கெட் சங்க தலைவரும் மத்திய அமைச்சருமான சரத் பவார் மற்றும் நிர்வாகிகள் துவக்க விழா மற்றும் முதல் போட்டியை புறக்கணிக்க முடிவு செய்தனர்.


பிளாக்கில் டிக்கெட் விற்பனை

ஐ.பி.எல்., போட்டிகளுக்கான குறைந்தபட்ச டிக்கெட்டின் விலை 200 ரூபாயிலிருந்து, 12 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், சென்னையில் நடக்கும் ஏழு போட்டிகளில், 200 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரையிலான டிக்கெட்டுகள் பெரும்பாலும் விற்று தீர்ந்து விட்டன.

200 ரூபாய்க்கு விற்கப்படும் டிக்கெட், பிளாக்கில் 500 ரூபாயாகவும், 1,000 ரூபாய்க்கான டிக்கெட் 2,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

0 comments:

Post a Comment