சென்னை சூப்பர் கிங்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதும் ஐ.பி.எல்., லீக் போட்டி இன்று சென்னையில் நடக்க உள்ளது. தனது முதல் போட்டியை வெற்றியுடன் துவக்க காத்திருக்கிறது சென்னை அணி.
மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நேற்று முன் தினம் மும்பையில் துவங்கியது. இன்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ள தொடரின் 5 வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதுகின்றன.
பேட்டிங் பலம்:
தோனி தலைமையிலான சென்னை அணி வலுவான நிலையில் உள்ளது. ஹைடன், ரெய்னா, பத்ரிநாத், பாத்திவ் படேல், முரளி விஜய், ஜஸ்டின் கெம்ப் என பேட்டிங் படை நீள்கிறது. புதிய "மங்கூஸ்' வகை பேட்டை பயன்படுத்த உள்ள ஹைடன், சென்னை அணிக்கு அதிரடி துவக்கம் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆல்-ரவுண்டர்களான பிளின்டாப், ஓரம் ஆகியோர் காயம் காரணமாக பங்கேற்க வில்ø. இதனால் பந்து வீச்சில் தொய்வு காணப்படுகிறது. ஆனால் அணியின் வெற்றிக்கு இதனால் பாதிப்பில்லை என தோனி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், பாலாஜி, கோனி, தியாகி, துஷாரா ஆகியோர் வேகப்பந்து வீச்சில் அசத்துவர். கடந்த முறை, இவர்கள் சிறப்பாக செயல்பட்டு நம்பிக்கை அளித்தார்கள்,'' என்றார். முரளிதரன் சுழலும் சென்னை அணியின் வெற்றிக்கு கைகொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
டெக்கான் சோகம்:
நடப்பு சாம்பியன் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வி அடைந்த சோகத்தில் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றியை எட்ட கடுமையாக முயற்சிக்கும்.
முதல் போட்டியில் அரை சதம் கடந்து அசத்திய கேப்டன் கில்கிறிஸ்ட், இன்றும் அசத்தலாம். சைமண்ட்ஸ், கிப்ஸ், லட்சுமண், ரோகித் சர்மா உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடினால், டெக்கான் சாதிக்க வாய்ப்பு உள்ளது. வாஸ், ஜஸ்கரன், ஆர்.பி.சிங், பிரக்யான் ஓஜா பந்து வீச்சு கூட்டணி ஆறுதல் அளிப்பது கூடுதல் பலம்.
பயிற்சி இல்லை:
நேற்று சென்னையில் புதிய தலைமைச் செயலகத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. போட்டி நடக்க உள்ள சேப்பாக்கம் மைதானம், இதற்கு அருகில் இருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இரு அணி வீரர்களும் பயிற்சி மேற்கொள்ள வில்லை.
0 comments:
Post a Comment