உலக கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி 2-5 என்ற கோல் கணக்கில், ஸ்பெயின் அணியிடம் போராடி தோல்வியடைந்தது. இதன்மூலம் உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் இந்திய அணியின் கனவு, கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.
ஸ்பெயின் ஆதிக்கம்: விறுவிறுப்பான முதல் பாதியில் ஸ்பெயின் அணியின் ஆதிக்கம் இருந்தது. ஆட்டத்தின் 19 வது நிமிடத்தில், ஸ்பெயின் வீரர் ஆல்பர்ட் சால்டா ஒரு பீல்டு கோல் அடித்து, 1-0 என முன்னிலை தந்தார்.
ஆட்டத்தின் 24 வது நிமிடத்தில் கிடைத்த "பெனால்டி கார்னர்' வாய்ப்பை இந்திய வீரர்கள் வீணடித்தனர். இதேபோல ஸ்பெயின் அணிக்கு கிடைத்த மூன்று "பெனால்டி கார்னர்' வாய்ப்பை (10, 22, 29 வது நிமிடம்) இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஸ் சூப்பராக தடுத்தார். இருப்பினும், 35 வது நிமிடத்தில் கேப்டன் போல் அமாட் ஒரு பீல்டு கோலடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-0 என முன்னிலை வகித்தது.
கோல் மழை: இரண்டாவது பாதியின் துவக்கத்தில் இரு அணியினரும் கோல் மழை பொழிந்தனர். ஆட்டத்தின் 39 வது நிமிடத்தில் இந்தியாவின் சந்தீப் சிங், "பெனால்டி கார்னர்' மூலம் ஒரு கோல் அடித்தார். இதற்கு ஸ்பெயினின் பயூ குயிமடா (41 வது நிமிடம்), ரமோன் அலிக்ரி (42 வது) தலா ஒரு கோலடித்து பதிலடி கொடுத்தனர்.
பின்னர் இந்தியாவின் குருவிந்தர் சிங் சாண்டி (43 வது) ஒரு கோலடித்து நம்பிக்கை அளித்தார். பின்னர் சிறிது நேரம் இரு அணியினரும் கோலடிக்க முடியாமல் திணறினர். ஆட்டத்தின் 67 வது நிமிடத்தில் குயிமடா, "பெனால்டி கார்னர்' மூலம் கோலடிக்க ஸ்பெயின் அணியின் வெற்றி வாய்ப்பு அதிகமானது. இறுதியில் ஸ்பெயின் அணி 5-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி, 2வது வெற்றி பெற்றது.
0 comments:
Post a Comment