கடைசி பந்தில் "திரில்' வெற்றி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி "திரில்' வெற்றி பெற்றது. 37 பந்துகளில் அதிரடி சதம் விளாசிய ராஜஸ்தான் அணி வீரர் யூசுப் பதானின் சதம் வீணானது.

மூன்றாவது இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்., ) கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. தொடரின் 2 வது போட்டியில் சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன் அணி, வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. "டாஸ்' ஜெயித்த சச்சின் பேட்டிங் தேர்வு செய்தார்.

சூப்பர் ஜோடி:

மும்பை அணிக்கு சச்சின் (17), ஜெயசூர்யா (23) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. டாரே (23) ஆறுதல் அளித்தார். பின்னர் 4 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராயுடு (55), சவுரப் திவாரி (53) ஜோடி பொறுப்புடன் ஆடியது. அடுத்து வந்த ஹர்பஜன் (8), டைட் பந்து வீச்சில் காலில் காயம் அடைந்து "ரிட்டயர்ட் ஹர்ட்' முறையில் பெவிலியன் திரும்பினார்.

கடைசி கட்டத்தில் மெக்லாரன் (11) தனது பங்கிற்கு 2 பவுண்டரிகள் விளாச, 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி, 6 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்தது.

யூசுப் விளாசல்:

கடின இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு, அஸ்னோத்கர் (0), நமன் ஓஜாவும் (12), ஜுன்ஜுன்வாலா (14) பெரிதாக சாதிக்க வில்லை. ஸ்மித் (26) ஆறுதல் அளித்தார். பின்னர் களமிறங்கிய யூசுப் பதான், ஆட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டார்.

இவருடன் இணைந்த டோக்ரா நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தார். 8 சிக்சர் 9 பவுண்டரிகளை விளாசிய யூசுப் பதான், ஐ.பி.எல்., அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். ஆனால் அடுத்த பந்திலேயே துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டாக, ராஜஸ்தான் அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.

"திரில்' வெற்றி: கடைசி 2 ஓவரில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. 19 வது ஓவரை ஜாகிர் வீசினார். கட்டுக்கோப்பாக வீசிய ஜாகிர், 7 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். கடைசி ஓவரில் ராஜஸ்தான் 12 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. மலிங்கா பந்து வீசினார். முதல் பந்தில் டோக்ரா (41) ரன்-அவுட்டானார். 2 வது பந்தில் உனியல் (0) போல்டானார்.

3 பந்தில் 1 வார்ன் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 4 வது பந்தில் 2 ரன், 5 வது பந்தில் 1 ரன் எடுக்கப்பட, கடைசி பந்தில் 6 ரன் தேவைப்பட்டது. மஸ்காரனாஸ் எதிர்கொண்டார். ஆனால் மலிங்கா துல்லியமாக பந்து வீச, 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் 7 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்திருந்தது. இறுதியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி திரில் வெற்றி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை யூசுப் பதான் கைப்பற்றினார்.


அதிவேக சதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 37 பந்துகளில் சதம் அடித்தார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் யூசுப் பதான். இதன் மூலம் ஐ.பி.எல்., அரங்கில் குறைந்த பந்துகளில் சதம் கடந்த வீரர் என்ற பெருமை பெற்றார். இப்பட்டியலில் "டாப்-3' வீரர்கள்:

வீரர் அணி பந்துகள் ஆண்டு இடம்

யூசுப்பதான் ராஜஸ்தான்ராயல்ஸ் 37 மும்பை
கில்கிறிஸ்ட் டெக்கான் சார்ஜர்ஸ் 42 மும்பை
ஜெயசூர்யா மும்பை இந்தியன்ஸ் 45 மும்பை
* உள்நாட்டு "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர்களில், இப்பெருமை எட்டிய 2 வது வீரர் என்ற சாதனை படைத்தார் யூசுப். இப்பட்டியலின் முதலிடத்தில் சைமண்ட்ஸ் உள்ளார். கடந்த 2004 ம் ஆண்டு மெய்ட்ஸ்டோனில் நடந்த ஒரு போட்டியில் கென்ட் அணி சார்பில் களமிறங்கிய இவர் 34 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.

0 comments:

Post a Comment