பி.சி.சி.ஐ.,க்கு போட்டியாக ஐ.பி.எல்.,

பி.சி.சி.ஐ.,க்கு போட்டியாக ஐ.பி.எல்., அமைப்பு வளர்ச்சி அடைந்து வருகிறது. ஒளிபரப்பு உரிமை மூலம் மட்டும் நாள் ஒன்றுக்கு 6 கோடி ரூபாய் வருமானம் கிடைப்பதாக ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) சார்பில் இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) துவங்கப்பட்டது. தற்போது ஐ.பி.எல்., மூன்றாவது "டுவென்டி-20 தொடர் வெற்றிகரமாக நடக்கிறது. இரண்டு புதிய அணிகளுக்கான ஏலம் மூலம் சமீபத்தில் ஐ.பி.எல்., அமைப்புக்கு 3 ஆயிரத்து 235 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது.

தவிர, இம்முறை 5 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, தாய் அமைப்பான பி.சி.சி.ஐ.,க்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது குறித்து லலித் மோடி கூறியது:

ஐ.பி.எல்., அமைப்பு வளர்ச்சி அடைந்து வருவது உண்மை தான். இதனால் பி.சி.சி.ஐ.,க்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. உதாரணமாக ஒளிபரப்பு உரிமை மூலம் எங்களுக்கு நாள் ஒன்றுக்கு 6 கோடி ரூபாய் தான் வருமானம் கிடைக்கிறது.

அதே நேரத்தில் போட்டி நடக்கும் காலங்களில் பி.சி.சி.ஐ.,க்கு 32.5 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. எனவே, ஐ.பி.எல்., அமைப்பை காட்டிலும் பி.சி.சி.ஐ., தான் முன்னிலையில் உள்ளது. அதனை நெருங்க முடியாது. ஐ.பி.எல்., வருமானத்தில் பெரும்பகுதி அணிகளுக்கு செல்கிறது. ஒரு பகுதி பி.சி.சி.ஐ.,க்கு கொடுக்கப்படுகிறது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் தற்போதைய பி.சி.சி.ஐ., அளவுக்கு ஐ.பி.எல்., முன்னேற்றம் காணும். அப்போது உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பான பி.சி.சி.ஐ., இன்னும் அதிகமான வளர்ச்சி கண்டிருக்கும். நாங்கள் பி.சி.சி.ஐ.,யுடன் போட்டியிடவில்லை.

மற்ற பொழுபோக்கு நிறுவனங்களை தான் சமாளிக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் ஐ.பி.எல்., போட்டிகள் ஒளிபரப்பாகும் நேரத்தில் "டிவிக்களில் பொழுபோக்கு நிகழ்ச்சிகள் அதிகம் காண்பிக்கப்படுகின்றன. இவற்றை முந்தி தற்போது அதிகம் பேர் பார்க்கக்கூடியதாக ஐ.பி.எல்., போட்டிகள் உருவாகியுள்ளன.

இவ்வாறு லலித் மோடி கூறினார்

0 comments:

Post a Comment