காம்பிர், நெஹ்ரா முன் அனுமதி பெறாமல் இலங்கை சென்று சிகிச்சை மேற்கொண்டது தொடர்பாக சர்ச்சை வெடித்துள்ளது. இருவரையும் பி.சி.சி.ஐ., கடுமையாக எச்சரித்துள்ளது. தவிர, இது குறித்து விளக்கம் அளிக்குமாறு டில்லி டேர்டெவில்ஸ் அணியின் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மூன்றாவது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில், டில்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக காம்பிர் உள்ளார். மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது, இவரது பின் தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதே போல டில்லி அணியின் வேகப்பந்துவீச்சாளரான நெஹ்ராவுக்கு, பயிற்சியின் போது விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இருவரும், இலங்கை வீரர் தில்ஷன் ஆலோசனைப்படி கொழும்பு சென்று, டாக்டர் எலியந்தா ஒயிட்டிடம், ஆயுர்வேத முறையில் சிகிச்சை எடுத்துக்கொண்டனர். பின் இந்தியா திரும்பினர். தங்களது இலங்கை பயணம் தொடர்பாக இவர்கள், இந்திய கிரிக்கெட் போர்டிடம்(பி.சி.சி.ஐ.,) முன் அனுமதி பெறவில்லை. டில்லிக்கு நோட்டீஸ்: இதனால் பி.சி.சி.ஐ., நிர்வாகத்தினர் ஆத்திரமடைந்தனர். பி.சி.சி.ஐ., சம்பள ஒப்பந்த பட்டியலில் காம்பிர் "ஏ' பிரிவில்(ரூ. 60 லட்சம்), நெஹ்ரா "பி' பிரிவில்(ரூ. 40 லட்சம்) உள்ளனர். ஒப்பந்த பட்டியலில் உள்ள இவர்கள் அனுமதி பெறாமல் இலங்கை சென்றதால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,""சிகிச்சை எடுத்துக் கொள்ள இலங்கை செல்வதற்கு முன் சம்பந்தப்பட்ட இரு வீரர்களும் எங்களுக்கு தகவல் கொடுத்திருக்க வேண்டும். அனுமதி பெறாமல் சென்றதால், இருவரையும் எச்சரித்துள்ளோம். டில்லி அணியின் நிர்வாகத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்,''என்றார்.
0 comments:
Post a Comment