பந்து வீச தாமதம்: சங்ககராவுக்கு தடை

ஐ.பி.எல்., தொடரில் மூன்றாவது முறையாக தாமதமாக பந்துவீசிய, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் சங்ககராவுக்கு, ரூ. 23 லட்சம் அபராதத்துடன், ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் நேற்று முன்தினம் மொகாலியில் நடந்த லீக் போட்டியில் பஞ்சாப், கோல்கட்டா அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில், தோல்வியடைந்து ஏமாற்றியது.

இதுவரை விளையாடிய ஆறு போட்டியில், ஒன்றில் மட்டுமே வெற்றி கண்ட பஞ்சாப் அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.

மூன்றாவது முறை:

இப்போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, தாமதமாக பந்துவீசியது. இதன்மூலம் பஞ்சாப் அணி, இத்தொடரில் மூன்றாவது முறையாக தாமதமாக பந்துவீசிய குற்றத்துக்கு ஆளானது. முன்னதாக டில்லி, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக பஞ்சாப் அணி தாமதமாக பந்துவீசியது.

இதன்மூலம் பஞ்சாப் அணி கேப்டன் சங்ககராவுக்கு ரூ. 23 லட்சம் அபராதம் மற்றும் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர், நாளை மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க மாட்டார்.

மற்ற வீரர்களுக்கு தலா ரூ. 10 லட்சம் அபாரதம் விதிக்கப்பட்டது. இத்தொடரில் முன்னதாக கங்குலி, சச்சின், காம்பிர் உள்ளிட்டோர் தலா ரூ. 10 லட்சம் அபராதம் செலுத்தி உள்ளனர்.

குவியும் அபராதம்

ஐ.பி.எல்., தொடரில், தாமதமாக பந்துவீசிய குற்றத்துக்காக செலுத்தப்படும் அபராதத் தொகை குவிகிறது. முன்னதாக கங்குலி (கோல்கட்டா), சச்சின் (மும்பை), காம்பிர் (டில்லி) அணி கேப்டன்கள் தலா ரூ. 10 லட்சம் அபராதம் செலுத்தினர்.

முதன்முதலில் பஞ்சாப் அணி, டில்லி அணிக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்துவீசியதால், கேப்டன் சங்ககரா மட்டும் ரூ. 10 லட்சம் அபராதம் செலுத்தினார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் இந்த தவறை செய்ததால், சங்ககரா ரூ. 20 லட்சம், மற்ற அணி வீரர்கள் தலா ரூ. 5 லட்சம் அபராதம் செலுத்தினர்.

கோல்கட்டா அணிக்கு எதிராக தாமதமாக பந்துவீசியது 3வது முறை என்பதால், சங்ககரா ரூ. 23 லட்சம், மற்ற வீரர்களுக்கு தலா ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

0 comments:

Post a Comment