30 வருட சாதனைக்கு சொந்தக்காரர்

தேசிய மற்றும் ஆசிய அளவிலான நீளம் தாண்டுதல் போட்டிகளில் 30 ஆண்டுகள் சாதனைக்கு சொந்தக்காரர் பிரபல தடகள வீரர் டி.சி.யோகனன்.

இவர் கேரள மாநிலம் கொல்லம் அருகேயுள்ள குண்டாரா கிராமத்தில் 1947-ம் ஆண்டு மே 19-ம் தேதி பிறந்தார். சிறுவயதிலேயே நீளம் தாண்டுதலில் அதீத ஆர்வம் கொண்டிருந்த யோகனன், கால்வாயை தாண்ட முயற்சித்தபோது தவறி விழுந்தார்.

அதைப்பார்த்த அவரது தந்தை கால்வாயைத் தாண்டினால் எலுமிச்சை பழச்சாறு தருவதாக அறிவித்தார். அப்போது வெற்றிகரமாக கால்வாயைத் தாண்டினார் யோகனன்.

அது முதற்கொண்டு நீளம் தாண்டுதலில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். முதன்முறையாக பெங்களூரில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான "பிரசன்ன குமார் தடகள போட்டி'யில் நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் பிரிவுகளில் பங்கேற்று தங்கப் பதக்கங்களை வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அதைத்தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களுக்காக விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. ஆனால் யோகனனோ, டாடா என்ஜினீயரிங் அண்ட் லோகோமோடிவ் நிறுவனத்தை (டெல்கோ) தேர்வு செய்தார்.

1970-ல் தேசிய தடகள போட்டியில் நீளம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்றார். அதற்கு அடுத்த ஆண்டு பாட்டியாலா தடகள போட்டியில் நீளம் தாண்டுதலில் 7.60 மீட்டர் தூரம் தாண்டி தேசிய அளவில் புதிய சாதனை படைத்தார்.

அதைத்தொடர்ந்து சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான தடகள போட்டியில் நீளம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதல் பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

1973-ல் தேசிய அளவிலான போட்டியில் 7.72 மீட்டர் தூரம் தாண்டி அதிக தூரத்தை தாண்டியவர் என்ற தேசிய சாதனையைப் படைத்தார். 1974-ல் தெஹ்ரானில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டுதலில் 8.07 மீட்டர் தூரம் தாண்டி வரலாற்றுச் சாதனை படைத்தார். இவரின் இந்த இரு சாதனைகளும் கடந்த 30 ஆண்டுகளாக தகர்க்கப்படாமல் உள்ளன.

1975-ல் ஜப்பானில் நடைபெற்ற தடகள போட்டிகளில் பங்கேற்ற யோகனன் தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். 1976-ல் மாண்ட்ரியல் ஒலிம்பிக்கில் பங்கேற்றதே அவரது கடைசி தடகள போட்டியாகும். விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான அர்ஜுனா விருது உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்

0 comments:

Post a Comment