டில்லி அணியின் அதிரடி தொடருமா?

ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று, டில்லி அணி, ராஜஸ்தான் அணியை சந்திக்கிறது. தனது முதல் போட்டியில் பஞ்சாபை வீழ்த்திய டில்லி அணியின் அதிரடி வெற்றி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் தற்போது நடக்கிறது. இன்று நடக்கும் 6வது லீக் போட்டியில், காம்பிர் தலைமையிலான டில்லி டேர்டெவில்ஸ் அணி, வார்னின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது.

"டாப் ஆர்டர்' பலவீனம்:

தனது முதல் போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி இருந்தாலும், அணியின் "டாப் ஆர்டர்' சரியில்லாதது, கேப்டன் காம்பிருக்கு வருத்தத்தை தந்திருக்கும். சேவக், தில்ஷன், டிவிலியர்ஸ் என அதிரடி ஜாம்பவான்கள் அதிக ரன்கள் சேர்க்க முயற்சிக்க வேண்டும்.

தினேஷ் கார்த்திக் போட்டியை வென்றுதரும் தகுதியை வளர்த்துக்கொண்டால் நல்லது. காம்பிரின் சிறப்பான "பார்ம்' இன்றும் தொடரும் என நம்பலாம்.

பவுலிங் நம்பிக்கை:

வேகப்பந்து வீச்சிற்கு நான்ஸ், மகரூப் ஆகியோர் நம்பிக்கை தருகிறார்கள். இவர்களுக்கு ஆஷிஸ் நெஹ்ரா பலம் சேர்க்கிறார். தவிர, அமித் மிஸ்ரா, சங்வான், யோ மகேஷ் தங்கள் பணியை, சிறப்பாக செய்வது, அணி நிர்வாகத்துக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும்.

யூசுப் பலம்:

மும்பைக்கு எதிராக மிகப்பெரிய இலக்கை விரட்டிய வார்ன் அணி, கடைசி நேர சொதப்பலில் வீழ்ந்தது. அதிவேக சதம் கடந்த யூசுப் பதான் மீது, அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தவிர, முதல் போட்டியில் ஏமாற்றி ஸ்மித், அஸ்னாத்கர், நமன் ஓஜா ஆகியோர் ஆறுதல் தர முயற்சிக்க வேண்டும்.மஸ்கரனாஸ் போன்றவர்கள் வெற்றிக்கு உதவவேண்டும்.

டெய்ட் ஏமாற்றம்:

ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷான் டெய்ட், ஏமாற்றம் அளிப்பது வார்னுக்கு கவலையாக இருக்கும். தவிர, வார்ன், உனியால், மஸ்கரனாஸ் ஆகியோரும் பவுலிங்கில் சாதிக்க முயற்சிக்க வேண்டும். இல்லையெனில் டில்லி அணியின் இரண்டாவது வெற்றிக்கு அணை போட முடியாது.

இரு அணிகள் இதுவரை...

இரு அணிகளும் இதுவரை ஐந்து முறை சந்தித்துள்ளன. இதில் 3ல் ராஜஸ்தான் அணியும், 2ல் டில்லி அணியும் வென்றுள்ளன.

0 comments:

Post a Comment