இந்திய தொடர்: ஸ்மித் நம்பிக்கை

இந்தியாவுக்கு எதிரான தொடரில் அனுபவ வீரர்கள் கைகொடுப்பார்கள்,'' என, தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் கிரீம் ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஸ்மித் தலைமையிலான தென் ஆப்ரிக்க அணி இன்று இந்தியா வருகிறது. இங்கு இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் பிப்., 6ல் நாக்பூரில் துவங்கவுள்ளது.

அதற்கு முன்னதாக பிப்., 2 ம் தேதி துவங்கும் தென் ஆப்ரிக்க அணி, இந்தியன் போர்டு பிரசிடென்ட் லெவன் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

சமீபத்தில் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பயிற்சியாளர் பதவியில் இருந்து மிக்கி ஆர்தர் விலகினார்.

பின் தேர்வுக்குழு அதிரடியாக கலைக்கப்பட்டது. இந்த பிரச்னைகளை கருத்தில் கொள்ளாமல், தங்களது அணி இந்தியாவில் சாதிக்கும் என கேப்டன் ஸ்மித், தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியது:

இந்திய துணைக்கண்டத்துக்கு செல்லும் அணிகள் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை. ஆனால் எங்கள் வீரர்கள் இந்தியாவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளனர். இம்முறையும் சிறப்பான ஆடுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

சிக்கலான நேரங்களில், அசத்தலாக செயல்பட்டு எப்படி மீண்டு வருவது என்பது குறித்து கடந்த சில ஆண்டுகளாக நன்கு அறிந்துள்ளனர். இந்த அனுபவத்துடன் அணியில் உள்ள சீனியர் வீரர்கள், இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாக இருந்து உதவுவார்கள்.

பயிற்சியாளர் ராஜினாமா, தேர்வுக்குழு கலைப்பு என கடந்த வாரம் முழுவதும் பரபரப்பான சம்பவங்கள் நடந்தது. அவற்றை எல்லாம் மறந்து இந்தியாவில் சாதிப்போம் என நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு ஸ்மித் கூறினார்.

சிறந்த அணி:

இந்தியா வரும் தென் ஆப்ரிக்க அணிக்கு தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள வான் ஜில் கூறுகையில்,"" இந்தியாவுக்கு எதிரான தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இதை வெல்வதற்கு தேவையான அளவில் வீரர்களை தயார்படுத்துவோம்,'' என்றார்.

0 comments:

Post a Comment