இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று மிர்புரில் துவங்குகிறது. காயத்தில் இருந்து மீண்ட கேப்டன் தோனி களமிறங்குவதால், இந்திய அணி உற்சாகத்துடன் காணப்படுகிறது.
சச்சின், காம்பிர் உள்ளிட்ட வீரர்கள் "சூப்பர் பார்மில்' இருப்பதால், இப்போட்டியில் வென்று, தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்ற காத்திருக்கிறது.
வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சிட்டகாங்கில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் இன்று மிர்புரில் உள்ள ஷெர்-இ-பங்களா மைதானத்தில் துவங்குகிறது.
தேறுவாரா யுவராஜ்:
இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங் பலமாக உள்ளது. சிட்டகாங் டெஸ்டில் சதம் அடித்த சச்சின், காம்பிர் மீண்டும் அசத்தலாம். துணை கேப்டன் சேவக் மிகப் பெரும் இலக்கை எட்ட வேண்டும். கடந்த போட்டியில் ஏமாற்றிய டிராவிட், இம்முறை சாதிக்க வாய்ப்பு உண்டு. காயம் காரணமாக லட்சுமண் இல்லாதது பின்னடைவு.
முதுகு வலியில் இருந்து மீண்ட கேப்டன் தோனி, அணிக்கு திரும்புவது நல்ல விஷயம். தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக், முரளி விஜய் இடையே போட்டி காணப்படுகிறது. இந்த மைதானத்தில் 2007ல் சதம் அடித்தவர் என்ற அடிப்படையில் தினேஷ் கார்த்திக் மீண்டும் வாய்ப்பு பெறலாம். கடந்த போட்டியில் இரண்டு இன்னிங்சிலும்(12, 25 ரன்) சொதப்பிய யுவராஜ், இம்முறை திறமையை நிரூபிக்க வேண்டும்.
ஸ்ரீசாந்த் "அவுட்':
பந்துவீச்சில் ஜாகிர் கான், இஷாந்த் சர்மா நம்பிக்கை அளிக்கின்றனர். இவர்கள் முதல் டெஸ்டில் தலா 5 விக்கெட் வீழ்த்தினர். காயத்தில் இருந்து குணமடைந்த ஹர்பஜன் சுழலில் கலக்க காத்திருக்கிறார். இவருடன் இணைந்து அமித் மிஸ்ரா மிரட்டலாம். தொடைப் பகுதியில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக ஸ்ரீசாந்த், நாடு திரும்புகிறார். கடந்த போட்டியில் இவர் பெரிதாக சாதிக்காததால், அணிக்கு பாதிப்பு இல்லை.
வங்கதேசம் வளர்ச்சி:
டெஸ்ட் அரங்கில் வங்கதேசம் விரைவாக வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த போட்டியில் இந்திய அணிக்கு கடும் சவால் கொடுத்தது. முதல் இன்னிங்சில் இந்திய விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தி காட்டினர். இதே போல இரண்டாவது இன்னிங்சில் 301 ரன்கள் எடுத்தனர்.
முஷ்பிகுர் ரஹிம் சதம் கடந்து அசத்தினார். தமிம் இக்பால் பொறுப்பாக பேட் செய்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அஷ்ரபுல், நபீஸ் தான் ஏமாற்றினர். இவர்கள் மிர்புரில் திறமை காட்டலாம். கேப்டன் சாகிப் அல் ஹசன் சுழலில் அசத்துகிறார்.
கடந்த போட்டியில் 7 விக்கெட் கைப்பற்றினார். இதே போல வேகத்தில் கலக்கிய சகாதத் ஹுசைன் 6 விக்கெட் வீழ்த்தினார். இவர்களது சூப்பர் பந்துவீச்சு தொடர்ந்தால், இந்தியாவுக்கு மீண்டும் நெருக்கடி கொடுக்கலாம்.
பேட் செய்யலாம்:
சிட்டகாங் டெஸ்டில் பனிப்பொழிவு, மூடுபனி, காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. மிர்புரில் வானிலை சீராக இருக்கும் என்பதால், போட்டிக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆடுகளம் பேட்டிங் செய்ய ஏதுவாக இருக்கும். இந்தியா, டாஸ் வென்றால் முதலில் பேட் செய்வது சிறந்தது
0 comments:
Post a Comment