ஐ.பி.எல்., ஏலத்தில் "ஜாக்பாட்'

ஐ.பி.எல்., ஏலத்தில் நியூசிலாந்து வீரர் ஷேன் பாண்ட், வெஸ்ட் இண்டீசின் போலார்டுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. இருவரும் அதிகபட்சமாக தலா 3.43 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டனர். அப்ரிதி உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை
இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) சார்பில் மூன்றாவது கட்ட "டுவென்டி-20' தொடர் வரும் மார்ச் 12 முதல் ஏப்., 25 ம் தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் நேற்று மும்பையில் நடந்தது.

ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி தலைமையில் நடந்த ஏலத்தில் நீடா அம்பானி (மும்பை இந்தியன்ஸ்), விஜய் மல்லையா (ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு), பிரித்தி ஜிந்தா (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), ஷில்பா ஷெட்டி (ராஜஸ்தான் ராயல்ஸ்), தவிர, கோல்கட்டா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

67 பேர் பங்கேற்பு: வீரர்களின் திறமை அடிப்படையில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உள்ளிட்ட 11 அணிகளை சேர்ந்த 66 வீரர்கள் வாய்ப்பு பெற்றிருந்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராப் குயினே ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டாதால் மொத்தம் 13 இடங்களுக்கு மட்டும் வீரர்கள் ஏலம் நடந்தது.

புதிய முறை: ஏலத்தில் எடுக்கப்படும் வீரர்கள் இந்த ஆண்டு தொடரில் மட்டும் தான் பங்கேற்க முடியும். இதனால் கடந்த ஆண்டு பிளின்டாப்பிற்கு 7.5 கோடி கொடுத்ததை போல அதிக தொகை கொடுக்க இம்முறை எந்த நிர்வாகமும் முன்வரவில்லை.

முதல் சுற்று ஏலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர்' போலார்டை (22) வாங்குவதற்கு சென்னை, மும்பை, பஞ்சாப் மற்றும் டெக்கான் அணிகள் இடையே பலத்த போட்டி காணப்பட்டது. இறுதியில் நான்கு அணிகளும் சம தொகைக்கு ஏலம் கேட்டதால், "சைலன்ட் டை-பிரேக்கர்' முறை பயன்படுத்தப்பட்டது. இதில் போலார்டை, 3.43 கோடி கொடுத்து மும்பை அணி தட்டிச் சென்றது.

பாண்ட்டுக்கு போட்டி: அடுத்து நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட்டை ஏலத்தில் எடுக்க கோல்கட்டா, டெக்கான் அணிகள் இடையே போட்டி இருந்தது. இருவரும் சம தொகைக்கு ஏலம் கேட்க, "சைலன்ட் டை-பிரேக்கர்' முறையில் பாண்ட்(3.43 கோடி), கோல்கட்டா அணியால் விலைக்கு வாங்கப்பட்டார். இந்த ஆண்டு ஏலத்தில் போலார்டு, பாண்ட் இருவரும் அதிக தொகைக்கு வாங்கப்பட்டனர்.

3வது இடத்தில் ரோச்: இதற்கு அடுத்து வெஸ்ட் இண்டீசின் கீமர் ரோச்சை, டெக்கான் சார்ஜர்ஸ் அணி 3 கோடியே 30 லட்சத்துக்கு வாங்கியது. பின் டில்லி அணி, தென் ஆப்ரிக்க வீரர் பார்னலை (2.80 கோடி) ஏலத்தில் எடுத்தது. தவிர, முகமது கைப், அப்துல்லா (பஞ்சாப்), மார்கன் (பெங்களூரு), மார்டின், வோஜஸ் (ராஜஸ்தான்), கெம்ப், பெரேரா (சென்னை) வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

இந்திய இளம் வீரர்கள் (19வயதுக்குட்பட்டோர்) அசோக் மேனரியா, ஹர்மீட் சிங், ஹர்சால் படேல் மூவரும் மும்பை, டெக்கான், பெங்களூரு அணிகளால் தலா 8 லட்சத்துக்கு வாங்கப்பட்டனர்.

பரிதாப பாக்.,: இந்த ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் நிலைதான் பரிதாபமாக இருந்தது. "டுவென்டி-20' அணியின் கேப்டன் அப்ரிதியை யாரும் ஏலத்தில் எடுக்க முன்வராதது ஆச்சர்யமாக இருந்தது. இதேபோல் கம்ரான் அக்மல், உமர் குல், தன்வீர் என 11 வீரர்களில் யாரும் விலை போகவில்லை. ஆஸ்திரேலியாவின் 11 வீரர்களில் இருவர் மட்டுமே தேர்வு பெற்றனர்.

0 comments:

Post a Comment