வங்காளதேச டெஸ்ட் : தெண்டுல்கர் 44-வது சதம்

இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே நடக்கும் 2 டெஸ்ட் போட்டிகளில் முதல் டெஸ்ட் போட்டி சிட்டகாங் நகரில் நேற்று தொடங்கியது.

முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 63 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச் சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது தெண்டுல்கர் 76 ரன்களுடனும் இஷாந்த்சர்மா 1 ரன்னுடனும் இருந்தனர்.

இன்று காலை 9.00 மணிக்கு போட்டி தொடங்க வேண்டும். ஆனால் பனி மூட்டத்தால் மைதானம் சரியாக தெரியவில்லை. எனவே போட்டி 1 1/2 மணி நேரம் தாமதமாக 10.30 மணிக்கு தொடங்கியது.

76 ரன்களுடன் இருந்த தெண்டுல்கர் சதம் அடிக்கும் நோக்கத்துடன் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினார். அதற்கு உதவும் வகையில் இஷாந்த் சர்மா தனது விக்கெட்டை இழக்காமல் காப்பாற்றி ஆட்டத்தை தொடர்ந்தார்.

அடித்து ஆடினால் விக்கெட் பறிபோய் விடலாம் என கருதியதால் இஷாந்த் சர்மா பந்தை லேசாக தட்டிவிட்டு மறுமுனைக்கு ஓட தெண்டுல்கர் மட்டும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல் லாம் அடித்து ஆடினார். 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் தெண்டுல்கர் 93 ரன்களை எட்டி இருந்தபோது இஷாந்த் சர்மா அவுட் ஆனார்.

அடுத்து தெண்டுல்கருடன் ஸ்ரீசாந்த் ஜோடி சேர்ந்தார். ஸ்ரீசாந்த் ஒரு ரன் மட்டும் எடுத்து மறுமுனைக்கு வந்தார். தெண்டுல்கர் அந்த பந்தை சந்தித்து பவுண்டரி அடித்து 97 ரன்னுக்கு முன்னேறினார். அடுத்த பந்தையும் பவுண்டரிக்கு விளாசி சதத்தை கடந்தார்.

இது தெண்டுல்கரின் 44-வது சதம் ஆகும். அவர் 160 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி, 2 சிக்சருடன் சதத்தை எட்டினார். அடுத்து மேலும் சில பந்துகளை சந்தித்த தெண்டுல்கர் ஒரு பவுண்டரி மூலம் 105 ரன்களை எட்டினார். அப்போது ஸ்ரீசாந்த் அவுட் ஆனார்.

இந்தியா 70.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 243 ரன்கள் எடுத்து இருந்தது. தெண்டுல்கர் 105 ரன்களுடன் கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.

இந்திய வீரர்கள் சீட்டு கட்டுகள் போல சரிந்த நிலையில் 4-வது வீரராக களம் இறங்கிய தெண்டுல்கர் கடைசி வரை தாக்குபிடித்து சதம் அடித்ததுடன் இந்திய அணி 243 ரன்கள் எடுக்கவும் உதவினார்.

பின்னர் வங்காளதேசம் முதல் இன்னிங்சில் ஆடியது. மதியம் 1 மணி நிலவரப்படி விக்கெட் இழப்பின்றி 39 ரன்கள் எடுத்து இருந்தது. அதன்பின் வங்காளதேசம் 59 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது. அத்துடன் மோதிய வெளிச்சம் இல்லாமையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது

0 comments:

Post a Comment