இந்திய அணி "நம்பர்-1' இடத்தில் நீடிப்பது கடினம்

இந்திய அணியில் சாம்பியன் பவுலர்கள் இல்லை. இதனால், டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் "நம்பர்-1' இடத்தில் அதிக காலம் நீடிக்க முடியாது,'" என, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயான் சாப்பல் எச்சரித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் அரங்கில் இந்திய அணி மகத்தான எழுச்சி கண்டது. இந்தக் கால கட்டத்தில் 20 டெஸ்டில் விளையாடி 9ல் வென்றுள்ளது. மூன்றில் தோல்வி அடைந்துள்ளது.

சமீபத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி 2-0 என வென்றது. இதையடுத்து டெஸ்ட் ரேங்கிங்கில் முதன் முறையாக "நம்பர்-1' இடம் பெற்றது. ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் மஞ்ச்ரேக்கர் மற்றும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான இயான் சாப்பல் விவாதித்தனர்.

அப்போது மஞ்ச்ரேக்கர் கூறுகையில்,"" இந்திய அணியின் சமீபத்திய வெற்றிகளுக்கு துவக்க ஜோடியான சேவக், காம்பிர் தான் காரணம். இவர்கள் அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுக்கின்றனர். தவிர, அன்னிய மண்ணிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் அசத்துகின்றனர். அனைத்து வகையான "ஷாட்' அடிப்பதிலும் கெட்டிக்காரர்களாக உள்ளனர்,''என்றார்.

இதற்கு இயான் சாப்பல் கூறியது:

மிகச் சிறந்த அணிகள் துவக்க ஜோடியின் ஆட்டத்தை மட்டும் சார்ந்து இருப்பதில்லை. கிரிக்கெட் அரங்கில் நீண்ட காலம் வெற்றிகரமான அணியாக ஜொலிக்க இரண்டு சாம்பியன் பவுலர்கள் தேவை. கடந்த 12 மாதங்களில் இந்திய பவுலர்களின் சராசரி மற்றும் "ஸ்டிரைக் ரேட்' அடிப்படையில் பார்த்தால், இரண்டு சாம்பியன் பவுலர்களை கண்டறிய முடியவில்லை.

குறைந்தபட்சம் ஒருவரை கூட குறிப்பிட முடியவில்லை. அணியின் பேட்டிங் வரிசை சிறப்பாக உள்ளது. ஆனாலும், தொடர்ந்து வெற்றி பெறக் கூடிய அளவுக்கு பவுலிங் சிறப்பாக இல்லை. இதனால் ஆஸ்திரேலியா போல டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் அதிக காலம் "நம்பர்-1' அணியாக இந்தியா நீடிப்பது மிகவும் கடினம்.

கடந்த இரண்டு தொடர்களில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வெற்றி கண்டுள்ளது. அந்த சமயத்தில் மெக்ராத், வார்ன், லாங்கர், ஹைடன், கில்கிறிஸ்ட் ஆகிய முன்னணி வீரர்கள் ஒட்டுமொத்தமாக ஓய்வு பெற்றதால் பலவீனமாக காட்சி அளித்தது. ஆஸ்திரேலியா வலுவான அணியாக இருந்த போது இந்தியா வென்றிருந்தால், அதனை மாபெரும் சாதனையாக கருதியிருப்பேன்.

இவ்வாறு இயான் சாப்பல் கூறினார்.

0 comments:

Post a Comment