3 நாடுகள் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் உள்ள மிர்பூரில் நடைபெற்று வருகிறது. தொடக்க ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காள தேசத்தை தோற்கடித்தது. நேற்று நடந்த 2-வது ஆட்டத் தில் இந்தியா தோல்வியை சந்தித்தது. இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இலங்கை பெற்ற 2-வது வெற்றியாகும்.
279 ரன் எடுத்தும் இந்தியா தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. பந்துவீச்சு தொடர்ந்து மோசமாக இருந்து வருகிறது. இது இந்தியாவுக்கு பின்ன டைவாக கருதப்படுகிறது. ஜாகீர்கான், நெக்ரா ரன்களை வாரி கொடுத்து விட்டனர்.
இதேபோல பனியும் ஆட்டத்தின் முக்கிய பங்கு வகிக்கிறது. அங்கு கடினமான பனி காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாகி விடுகிறது. இதனால் 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாகி விடுகிறது. பனி காரணமாக பந்து வீச்சாளர்களால் பந்தை `கிரீப்' செய்ய முடிய வில்லை. இதனால் அவர்கள் நேர்த்தியாக பந்து வீச முடிய வில்லை.
இந்திய அணி கேப்டன் டோனி தோல்விக்கு இதையே காரணமாக சொல்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
எங்கள் அணியின் தோல் விக்கு முக்கிய காரணமே பனிதான். 279 ரன் என்பது நல்ல ஸ்கோர்தான். முதல் 10 ஓவர்களில் பந்து வீச்சாளர்கள் ஒன்றுமே செய்யவில்லை. பனி துளியால் பவுலர்கள் பந்தை `கிரீப்' செய்ய முடிய வில்லை.
கடுமையான பனியால் மின்னொளியில் பந்து வீசுவது என்பது பவுலர்களுக்கு மிகவும் சவாலானதாகும். அவர்களால் பந்தை `கிரீப்' செய்ய இயலவில்லை. மிகப்பெரிய ஸ்கோர் எடுத்தால் தான் 2-வது பீல்டிங் செய்யும் அணியால் வெற்றியை பெற முடியும். அதுவும் தொடக்கத்தில் விக்கெட்டை கைப்பற்ற வேண்டும்.
முதலில் ஆடுவதற்கும், 2-வது ஆடுவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. பந்துவீச்சு குறித்து ஏமாற்றம் அடையவில்லை. தோல்வி தான் ஏமாற்றம் அளிக்கிறது.
பனி தொடர்பாக போட்டி நடுவரிடம் புகார் செய்வோம். ஆட்டத்தை முன்னதாக தொடங்குவதுதான் நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.
வெற்றி குறித்து இலங்கை கேப்டன் சங்ககரா கூறியதாவது:-
சமரவீராவின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. கடைசி நேரத்தில் பெரரா நன்றாக ஆடினார். பனிதுளி ஆட்டத்தின் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆட்டத்தை காலை 11 மணிக்கு தொடங்குவது நல்லது.இவ்வாறு அவர் கூறினார்.
இன்று ஓய்வு நாளாகும். நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேச அணிகள் மோதுகின்றன.
0 comments:
Post a Comment