இந்தியாவுக்கு வங்கதேசம் பதிலடி

மிர்புர் டெஸ்டில் தமிம் இக்பால் சதமடித்து அசத்த, இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது வங்கதேசம்.


வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சிட்டகாங்கில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் மிர்புரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 233 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி, 2 ம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 459 ரன்கள் எடுத்திருந்தது.


தோனி அரை சதம்: நேற்று 3 ம் நாள் ஆட்டம் நடந்தது. பொறுப்புடன் ஆடிய இந்திய கேப்டன் தோனி, அரை சதம் கடந்தார். இவர் 89 ரன்கள் குவித்து அவுட்டானார். இந்திய "டெயிலெண்டர்களான' ஜாகிர் (0), இஷாந்த் (13) சோபிக்க தவறினர்.

133 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 544 ரன்கள் சேர்த்தது. இந்நிலையில் முதல் இன்னிங்சை "டிக்ளேர்' செய்தது. இதன் மூலம் 311 ரன்கள் முன்னிலை பெற்றது.


தமிம் அதிரடி: இரண்டாவது இன்னிங்சை ஆடிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் நல்ல துவக்கம் தந்தார். இம்ருல் (5) ஏமாற்றினார். அடுத்து வந்த சித்திக், இக்பாலுடன் இணைந்து பொறுப்புடன் ஆடினார். டெஸ்ட் அரங்கில் 2 வது சதம் கடந்தார் தமிம் இக்பால்.

சித்திக் (55), அரை சதம் கடந்து அவுட்டானார். 18 பவுண்டரி 3 சிக்சருடன் 151 ரன்கள் குவித்த தமிம் இக்பால், ஜாகிர் வேகத்தில் பெவிலியன் திரும்பினார். தமிம் இக்பால், சித்திக் ஜோடி 2 வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் சேர்த்து அசத்தியது.


நேற்றைய 3 ம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்திருந்தது. அஷ்ரபுல் (2), சகாதத் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

0 comments:

Post a Comment