முத்தரப்பு தொடரின் இன்றைய முக்கிய லீக் போட்டியில் இந்திய அணி, இலங்கையுடன் மோதுகிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில், இந்திய அணி பைனலுக்கு முன்னேறலாம்.
இந்தியா, வங்கதேசம், இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது. இதுவரை நடந்த 4 லீக் போட்டிகளின் முடிவில் 3 வெற்றிகளை பெற்ற இலங்கை அணி (12 புள்ளி) பைனலுக்கு முன்னேறி விட்டது.
இந்தியா ஒரு வெற்றியுடன் (4 புள்ளி) இரண்டாவது இடத்தில் உள்ளது. தொடரை நடத்தும் வங்கதேச அணியோ தான் பங்கேற்ற 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து பரிதாப நிலையில் உள்ளது. இதனையடுத்து இன்று நடக்கும் 5 வது லீக் போட்டியில், இந்திய அணி, இலங்கையுடன் மோதுகிறது.
துவக்கம் சொதப்பல் :
இந்திய அணியை பொறுத்த வரை, இத்தொடரில் இலங்கை அணியுடன் மோதிய தனது முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இருப்பினும் இரண்டாவது போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி "பார்முக்கு' திரும்பியுள்ளது.
'சேவக், காம்பிர் துவக்க ஜோடி இத்தொடரில் பெரும் ஏமாற்றம் அளித்து வருகிறது. இன்றைய போட்டியில் இவர்கள் அணிக்கு சிறந்த அடித்தளம் அமைத்து தர வேண்டியது அவசியம். கடந்த போட்டியில் ஏமாற்றம் அளித்த யுவராஜ், இன்று அசத்தும் பட்சத்தில் இந்தியா அதிக ரன்களை குவிக்கலாம்.
மிடில் ஆர்டர் பலம்:
இளம் வீரர் கோஹ்லியின் ஆட்டம் இந்திய அணிக்கு பக்கபலமாக அமைந்துள்ளது. மிடில் ஆர்டில் கேப்டன் தோனி, ரெய்னாவின் பொறுப்பான ஆட்டம் இன்றும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.
பவுலிங், பீல்டிங் சொதப்பல்:
ஜாகிர், நெஹ்ரா, ஸ்ரீசாந்த் வேகக் கூட்டணியின் பந்து வீச்சு பாராட்டும்படியாக இல்லை. அதிக ரன்களை விட்டுக் கொடுத்து, விக்கெட் கைப்பற்ற தடுமாறி வருகின்றனர். சுழற்பந்து வீச்சும் இதே நிலையில் தான் உள்ளது.
சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பீல்டிங்கில் சொதப்பிய இந்திய அணி, இத்தொடரிலும் அதே நிலையில் நீடிப்பது அணிக்கு பெரும் பின்னடைவை தந்துள்ளது. பவுலிங், பீல்டிங்கில் உள்ள குறைபாடுகளை நீக்கினால், இந்திய அணி நெருக்கடி இன்றி சாதிக்கலாம்.
இலங்கை அசத்தல்:
முத்தரப்பு தொடரில் இலங்கை அணி அசத்தி வருகிறது. தரங்கா, ஜெயவர்தனா, சங்ககரா, சமரவீரா என முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் நல்ல பார்மில் உள்ளனர். வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட வலி காரணாக கடந்த இரண்டு போட்டிகளிலிருந்து விலகிய தில்ஷன், இன்றைய போட்டியில் பங்கேற்க அதிக வாயப்பு உள்ளது.
மொத்தத்தில் இலங்கை அணியின் பேட்டிங் வரிசை இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. பெரேரா, துஷாரா, குலசேகரா, ரந்திவ், பண்டாரா ஆகியோர் பந்து வீச்சில் அசத்தி வருவது கூடுதல் பலம்.
"டாஸ்' முக்கியம்:
இன்றைய போட்டியில் "டாஸ்' ஜெயிக்கும் பட்சத்தில் இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்து அதிக ரன்களை குவிக்க வேண்டியது அவசியம். தவிர, இலங்கை அணிக்கு பந்து வீச்சில் நெருக்கடி கொடுக்க வேண்டும். ஒருவேளை இப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தால், பைனலுக்கு முன்னேற வங்கதேசத்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் கட்டாய வெற்றி பெற வேண்டியிருக்கும்.
இரு அணிகளும் இதுவரை...
* இந்தியா-இலங்கை அணிகள் இதுவரை 119 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியா 63, இலங்கை 45 வெற்றியை பெற்றுள்ளன. 11 போட்டிகளுக்கு முடிவு இல்லை.
* இலங்கை அணிக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் 414 (2009, ராஜ்கோட்). குறைந்த பட்ச ஸ்கோர் 54 (2000, சார்ஜா). இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணியின் அதிகபட்ச ஸ்கோர் 411 (2009, ராஜ்கோட்). குறைந்த பட்ச ஸ்கோர் 96 (1984, சார்ஜா).
* இவ்விரு அணிகள் மோதிய போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் இந்தியாவின் சச்சின் (78 போட்டி 2965 ரன்கள்). அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் இலங்கையின் முரளிதரன் (61 போட்டி 74 விக்கெட்).
ஜாகிர் அசத்துவார்: கோஹ்லி
விக்கெட் கைப்பற்ற தடுமாறி வரும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான், இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அசத்துவார் என சக வீரர் விராத் கோஹ்லி தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில்,"" ஜாகிர் கானின் பந்து வீச்சு மோசம் என்று சொல்ல முடியாது.
அவர் அனுபவ மிக்க பவுலர். தவறுகளை திருத்திக் கொண்டு அடுத்த இரண்டு போட்டிகளில் சாதிப்பார். இன்றைய போட்டியில் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டியிருக்கும். இருப்பினும் இலங்கை அணியின் பலம், பலவீனங்களை நன்கு அறிந்து வைத்திருக்கிறோம்,'' என்றார்
0 comments:
Post a Comment