தென் ஆப்ரிக்காவை வீழ்த்த கபில் "ஐடியா'

இந்திய அணியின் பலம் சுழற்பந்துவீச்சு தான். இதற்கேற்ப தென் ஆப்ரிக்க டெஸ்ட் தொடரின் போது ஆடுகளங்கள் அமைக்கப்பட வேண்டும், '' என, கபில் தேவ் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இன்று இந்தியா வரும் தென் ஆப்ரிக்க அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. இதுகுறித்து இந்திய "ஜாம்பவான்' கபில் தேவ் கூறியது:

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு பிரிவை பொறுத்தவரை ஜாகிர் கான் மட்டுமே சிறப்பாக செயல்படுகிறார். அவரைத் தவிர, போட்டிகளில் சாதிக்கக்கூடிய அளவில் வேறு யாரும் இல்லை. இஷாந்த் சர்மாவின் பலமே அவரது "இன்ஸ்விங்' பவுலிங் தான்.

இதை பேட்ஸ்மேன்கள் எளிதாக தெரிந்து கொள்வதால் தான், அவரால் சாதிக்க முடியவில்லை. போட்டிகளில் சிறப்பாக செயல்பட, இஷாந்த் சர்மா புதிய வழிகளை காண வேண்டும். ஒருவேளை இவரால் முடியாத பட்சத்தில் அணிக்கு, ஏமாற்றமாகிவிடும்.


சுழலுக்கு சாதகம்:

ஆனால் நமது அணியுடன் ஒப்பிடுகையில் தென் ஆப்ரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் திறமை வாய்ந்தவர்கள். நமது பலம், சுழற் பந்து வீச்சு தான். இதனால் வரவிருக்கும் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு, சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இந்திய அணி விளையாட வேண்டும். இவ்வாறு கபில் தேவ் தெரிவித்தார்.


திறமை உள்ளது:

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்டு ஹாட்லி கூறியது:

இந்திய அணியை பொறுத்தவரையில் திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இவர்களால் சரியான நேரத்தில் விக்கெட்டை வீழ்த்தி போட்டிகளை வென்று தரமுடியும். டெஸ்ட், ஒருநாள் அல்லது "டுவென்டி-20' என போட்டிக்கு தகுந்து விரைவில் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். இதுபோன்று உடனடியாக மாறுவது, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கடினம்.


சிறப்பான நிர்வாகம்:

ஆனால் லேசாக சோர்ந்து விடுவது, காயமடைவது, விரைவில் இளைத்துவிடுவது போன்ற காரணங்களால் பார்மை இழந்து விடுகிறார்கள். ஒருசில போட்டிகளில் பங்கேற்காவிட்டாலும், அடுத்து டெஸ்ட் போட்டிக்கு தகுந்து, புத்துணர்ச்சியுடன் வர வேண்டும். இந்த வீரர்களை சரியாக நிர்வகிக்க வேண்டும்.

இவ்வாறு ரிச்சர்டு ஹாட்லி கூறினார்.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டெனிஸ் லில்லி கூறுகையில்,"" சில வீரர்கள் புதிதாக அறிமுகமாகும் போது எதிர்பார்ப்புக்கு மாறாக சிறப்பாக செயல்படுகிறார்கள். பின் படிப்படியாக ஏமாற்றம் தருகிறார்கள். ஜாகிர் கான், மெக்ராத் போன்றவர்கள் நீண்ட காலம் சாதிக்கின்றனர்.

அதிகப்படியான போட்டிகளில் பங்கேற்பது தான் இதற்கு காரணம். இதனால் சில போட்டிகளில் மகிழ்ச்சி, சில ஆட்டங்களில் ஏமாற்றம் கிடைக்கும். இந்த ஏமாற்றத்தை அவர்களால் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாமல் போவதால் "பார்ம்' இழக்கிறார்கள்,'' என்றார்.

0 comments:

Post a Comment