டர்பனில் டர்ர்ர்ர்... - தொடரை இழந்தது இந்தியா



தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டர்பன் டெஸ்டில், பேட்ஸ்மேன்கள் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்த, இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை இழந்தது. இளம் வீரர் ரகானே அரைசதம் அடித்து ஆறுதல் தந்தார். 
                                   
தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரு அணிகள் மோதிய இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட், டர்பனில் நடந்தது.      
                               
முதல் இன்னிங்சில் இந்தியா 334, தென் ஆப்ரிக்கா 500 ரன்கள் எடுத்தன. ௪வது நாள் முடிவில் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு, 68 ரன் எடுத்து, 98 ரன் பின் தங்கி இருந்தது. புஜாரா (32), விராத் கோஹ்லி (11) அவுட்டாகாமல் இருந்தனர்.            

திடீர் சரிவு: நேற்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணிக்கு துவக்கமே அதிர்ச்சி. ஸ்டைன் வீசிய முதல் பந்தில், விராத் கோஹ்லி (11) அவுட்.        

புஜாராவும் (32), ஸ்டைன் வேகத்தில் போல்டாகி வெளியேற, இந்திய அணி 71 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இதன் பின் ரோகித் சர்மா 25 ரன் எடுத்த போது, பிலாண்டர் வேகத்தில் வீழ்ந்தார்.அடுத்து வந்த தோனி (15), பீட்டர்சன் ஓவரில் தேவையில்லாமல் அவுட்டாக, இந்திய அணியின் தோல்வி உறுதியானது. 
                             
இதே ஓவரில், ஜடேஜாவை (8), மார்கல் ‘கேட்ச்’ செய்தார்.    
                           
ரகானே போராட்டம்: ஒரு புறம் விக்கெட் சரிந்தாலும், மறுபக்கம் இளம் வீரர் ரகானே உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து அசத்திய ரகானே, டெஸ்ட் அரங்கில் 2வது அரைசதம் கடந்தார். 

ஜாகிர் கான் (3 ரன், 41 பந்து), அம்பயர் ஸ்டீவ் டேவிசின் (ஆஸி.,) தவறான தீர்ப்பினால் எல்.பி.டபிள்யு., ஆனார். இஷாந்த் சர்மா (1) நிலைக்கவில்லை. மனம் தளராத ரகானே, 96 ரன்னுக்கு அவுட்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். 

இந்திய அணி, 223 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஷமி (1) அவுட்டாகாமல் இருந்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் பீட்டர்சன் 4, ஸ்டைன், பிலாண்டர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.           
                   
எளிய இலக்கு: இரண்டாவது இன்னிங்சில் 58 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்க அணி களமிறங்கியது. ஆல்விரோ பீட்டர்சன், ஸ்மித் இணைந்து விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுக்க, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்மித் (27), பீட்டர்சன் (31) அவுட்டாகாமல் இருந்தனர்.         
          
டெஸ்ட் தொடரை இந்திய அணி 0–1 என இழந்தது.


ஸ்டைன் ‘350’   
         
நேற்று இஷாந்த் சர்மாவை அவுட்டாக்கிய ஸ்டைன், டெஸ்ட் அரங்கில் வேகமாக ‘350’ விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில், இரண்டாவது (130 இன்னிங்ஸ்) இடம் பெற்றார். முதலிடத்தில் இலங்கையின் ஓய்வு பெற்ற சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் (120 இன்னிங்ஸ்) உள்ளார்.       

     
‘96’

2010ல் இந்திய அணி தென் ஆப்ரிக்கா சென்ற போது, டர்பன் டெஸ்ட் இரண்டாவது இன்னிங்சில் லட்சுமண், 96 ரன்கள் எடுத்து கைகொடுத்தார். இப்போட்டியில் இந்திய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.             

நேற்று அதே டர்பன் டெஸ்ட் இரண்டாவது இன்னிங்சில், புஜாரா 96 ரன்கள் எடுத்தார். இதில் இந்திய அணி தோல்வியடைந்தது.


தேறாத தோனி

அன்னியமண்ணில் கேப்டன் தோனி எடுக்குமு் முடிவுகள் இந்திய அணிக்கு வெற்றி தேடித்தரவில்லை. கடந்த 2011ல் இங்கிலாந்து (0–4), 2011–12ல் ஆஸ்திரேலியா (0–4) தொடர், தற்போது தென் ஆப்ரிக்க மண்ணில் (0–1) என, இந்திய அணி பங்கேற்ற 10 டெஸ்டில், 9ல் தோல்வியடைந்துள்ளது. ஜோகனஸ்பர்க்கில் நடந்த டெஸ்டில் மட்டும், வெற்றிபெற வேண்டிய போட்டியை, போராடி ‘டிரா’ செய்தனர்.       

* தவிர, கடந்த 1992–93 முதல் தென்ஆப்ரிக்க மண்ணில் இந்திய அணி பங்கேற்ற 6 டெஸ்ட் தொடரில், 5ல் இந்திய அணி தோற்றுள்ளது. கடைசியாக பங்கேற்ற 2010 டெஸ்ட் தொடரை மட்டும் ‘டிரா’ (1–1) செய்தது.        

           
புஜாரா முதலிடம்            
      
இரு அணிகள் மோதிய டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் புஜாரா, 4 இன்னிங்சில் 280 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். 

அடுத்த இரு இடங்களில் இந்தியாவின் கோஹ்லி (272), ரகானே (209) உள்ளனர். தென் ஆப்ரிக்காவின் டுபிளசி (197), டிவிலியர்ஸ் (190), ஆல்விரோ பீட்டர்சன் (190) அடுத்த மூன்று இடங்களில் உள்ளனர்.             

      
ஜாகிர் கான் ‘7’     
             
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்கள் வரிசையில் முதலிடத்தை (10) பெற்றார் பிலாண்டர். அடுத்த இரு இடங்களில் தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் (10), இந்தியாவின் ஜாகிர் கான் (7) உள்ளனர். தென்ஆப்ரிக்காவின் மார்கல், இந்தியாவின் ஜடேஜா தலா 6 விக்கெட் கைப்பற்றி, 4, 5வது இடத்தில் உள்ளனர்.                  

0 comments:

Post a Comment