புத்துயிர் தந்த புரட்சி கேப்டன்

தோனி தொட்டதெல்லாம் பொன்னாகிறது. இவர், கேப்டனாக பொறுப்பேற்ற பின் இந்திய அணியின் வெற்றிநடை தொடர்கிறது. ஒருநாள் அரங்கில். இதுவரை 20 கோப்பைகள் வென்று,"சூப்பர்' கேப்டனாக ஜொலிக்கிறார். டெஸ்ட் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்.
இந்திய அணி ஒருநாள் அரங்கில் 1974ல் காலடி எடுத்து வைத்தது. துவக்கத்தில் பலவீனமாக கருதப்பட்ட இந்திய அணி, கபில்தேவ், கவாஸ்கர் போன்ற வீரர்களின் வருகைக்குப் பின் சற்று எழுச்சி பெற்றது. முதல் பத்தாண்டுகளில் பங்கேற்ற 21 ஒருநாள் தொடர்களில் 7ல் கோப்பை வென்றது. 

இந்த காலத்தில் தான், இந்திய அணிக்கு கபில்தேவ் முதன் முறையாக உலக கோப்பை (1983) பெற்றுத் தந்தார். 1984-85 முதல் 2000 வரையிலான காலத்தில், இந்திய அணிக்கு சச்சின், கங்குலி, டிராவிட் போன்ற வீரர்களின் வரவு காரணமாக, மொத்தம் 85 தொடர்களில் பங்கேற்று, 31ல் கோப்பை வெல்ல முடிந்தது. ஆனாலும், உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களில் சாதிக்க முடியவில்லை. 

கடந்த 2007ல் சீனியர்கள் அடங்கிய இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்த உலக கோப்பை தொடரில், முதல் சுற்றுடன் நடையை கட்டியது. இதன் பின், ஒருநாள் அணிக்கான கேப்டன் பொறுப்பு தோனியிடம் தரப்பட்டது. இவர் தலைமைக்கு முதல் சோதனை, சொந்தமண்ணில் கிடைத்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, இந்திய அணி 2-4 என இழந்தது. 

இருப்பினும், அடுத்தடுத்த தொடர்களில் எழுச்சி பெற்றது இந்திய அணி. ஆஸ்திரேலிய மண்ணில் (2007-08) நடந்த முத்தரப்பு தொடரில், தோனியின் இந்திய அணி முதன் முறையாக கோப்பை வென்றது. 

கடைசி நேரத்தில் போட்டியை முடித்து தரும் "பினிஷிங்' மன்னனாக தோனி மிரட்டினார். 2011ல் சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை தொடரில், இலங்கைக்கு எதிரான பைனலில், இவரது 91 ரன்கள் கைகொடுக்க, 28 ஆண்டுக்குப் பின் இந்தியாவுக்கு மீண்டும் உலக கோப்பை கிடைத்தது. 

இந்த ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்திய அணி கோப்பை வென்றது. கடந்த 2008 முதல் 2009 வரை, 2012 முதல் இப்போது வரை என, தொடர்ச்சியாக இரு முறை தலா 6 கோப்பைகள் வெல்ல காரணமாக அமைந்தார். 

அதாவது, 1974 முதல் 2007 வரை என, இந்திய அணி பங்கேற்ற 154 ஒருநாள் தொடர்களில், பல்வேறு கேப்டன்கள் 53 கோப்பை வென்றனர். தோனி வந்த பின் பங்கேற்ற 37 தொடர்களில், இந்திய அணி 24ல் கோப்பை வென்றது. 

இதில் தோனி கேப்டனாக இருந்த 33 தொடர்களில், 20 முறை சாம்பியன் பட்டம் வென்றது. தவிர, தோனி தலைமையில் பங்கேற்ற 152 போட்டிகளில், 88 வெற்றிகள் கிடைத்துள்ளது. 

0 comments:

Post a Comment