சவாலான தென் ஆப்ரிக்க தொடர் - தோனி

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடர், அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்,'' என, இந்திய கேப்டன் தோனி தெரிவித்தார்.

மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க தோனி தலைமையிலான இந்திய அணி நேற்று தென் ஆப்ரிக்கா சென்றது. 

முதல் ஒருநாள் போட்டி ஜோகனஸ்பர்க்கில் வரும் டிச., 5ல் நடக்கிறது. மீதமுள்ள இரண்டு போட்டிகள் டர்பன் (டிச., 8), செஞ்சுரியனில் (டிச., 11) நடக்கின்றன. இரண்டு டெஸ்ட் போட்டிகள் ஜோகனஸ்பர்க் (டிச., 18-22), டர்பன் (டிச., 26-30) நகரங்களில் நடக்கின்றன.

நேற்று, மும்பையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தோனி கூறியது: "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் இல்லாமல் செல்வது புதிய துவக்கம். அணியில் இடம் பெற்றுள்ள நிறைய வீரர்கள், அதிக டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவமற்றவர்கள். 

ஆனால் ஒருநாள் போட்டிகளில் நிறைய பங்கேற்றுள்ளனர். எனவே இவர்களுக்கு தென் ஆப்ரிக்க தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும். இத்தொடர் மூலம், இளம் வீரர்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். 

பொதுவாக சொந்த மண்ணில் நடக்கும் போட்டியை விட, வெளிநாடுகளில் விளையாடும் போட்டிகள் சவாலானதாக இருக்கும். இம்முறை டெஸ்ட் தொடருக்கு முன், ஒருநாள் தொடர் அமைந்திருப்பது சிறப்பு. 

இதன்மூலம் இங்குள்ள ஆடுகளத்தின் தன்மை, தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப வீரர்கள் தயார் படுத்திக் கொள்ளலாம். எனவே, ஒருநாள் தொடர், டெஸ்ட் போட்டிகளுக்கான சிறந்த பயிற்சியாக அமையும் என நம்புகிறேன்.

டெஸ்ட் போட்டியில், மூன்றாவது துவக்க வீரராக காம்பிரை தான் கருதுகிறோம். ஏனெனில் துவக்க வீரர்களாக களமிறங்கும் முரளி விஜய், ஷிகர் தவான் சிறப்பாக விளையாடுவதால், காம்பிரை 3வது துவக்க வீரராகத்தான் தேர்வு செய்ய முடியும். தற்போது அணியில் இடம் பெறாத போதிலு<ம், இவர் தான் மாற்று துவக்க வீரர்.

சச்சினின் ஓய்வுக்கு பின், பேட்டிங் வரிசையில் 4வது வீரராக யாரை களமிறக்குவது என இன்னும் முடிவு செய்யவில்லை. எந்த ஒரு வீரரும், யாருடைய இடத்தையும் பூர்த்தி செய்ய முடியாது. வாய்ப்பு கிடைத்தால் 4வது இடத்தை நீக்கிவிட்டு, 1, 2, 3, 5, 6,...12 என களமிறங்கலாம்.

தென் ஆப்ரிக்க பயணத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள் சாதிக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் தென் ஆப்ரிக்க ஆடுகளங்கள் பவுன்சர் மற்றும் வேகப்பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைப்பு கொடுக்கும். சமீபத்திய போட்டிகளில் இந்திய அணியின் பந்துவீச்சு முன்னேற்றம் அடைந்துள்ளது. 

ஒருநாள் போட்டியை பொறுத்தவரை கடைசி 10 ஓவர்கள் முக்கிய பங்குவகிக்கும். கடைசி 10 ஓவரில் துல்லியமாக பந்துவீசும் பட்சத்தில் அதிகளவு ரன் வழங்குவதை கட்டுப்படுத்தலாம். டெஸ்ட் போட்டியில் தேவைப்படும் பட்சத்தில் 5வது பவுலரை பயன்படுத்துவோம். கடைசி இரண்டு டெஸ்டில் 4 பவுலர்கள் மட்டுமே பயன்படுத்தினோம். சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், நிச்சயம் சாதிப்பார் என எதிர்பார்க்கிறேன்.

தற்போதுள்ள நிலையில் இரு அணிகளும் ரேங்கிங்கில் "டாப்' வரிசையில் உள்ளன. ஒருநாள் போட்டியில் இந்தியாவும், டெஸ்டில் தென் ஆப்ரிக்காவும் முதலிடத்தில் உள்ளன. எனவே இத்தொடர் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும். 

தென் ஆப்ரிக்க ஆடுகளத்திற்கேற்ப, இந்திய வீரர்கள் தங்களை மாற்றிக் கொள்ளும் பட்சத்தில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதிக்கலாம். அதேவேளையில் தென் ஆப்ரிக்க அணியை குறைத்து மதிப்பிட முடியாது. ஏனெனில் திறமையான "ஆல்-ரவுண்டர்'கள் நிறைய உள்ளனர். 

பொதுவாக ஒவ்வொரு தொடரிலும் நெருக்கடி இருக்கத்தான் செய்யும். நெருக்கடிகளை கடந்து முழுத்திறமையை வெளிப்படுத்தினால் வெற்றி பெறலாம்.

இவ்வாறு தோனி கூறினார்.

0 comments:

Post a Comment