ஐ.சி.சி., ரேங்கிங் - விராத் கோஹ்லி பின்னடைவு

ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்திய வீரர் விராத் கோஹ்லி 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார்.
ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. 

இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி (859 புள்ளி) முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். 

இவர், சமீபத்தில் முடிந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சோபிக்காதது பின்னடைவுக்கு காரணம். கேப்டன் தோனி 6வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். 

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக சோபிக்காத இந்தியாவின் ஷிகர் தவான் (10வது இடம்), ரோகித் சர்மா (18வது), சுரேஷ் ரெய்னா (23வது) ஆகியோரும் பின்னடைவை சந்தித்தனர்.


டிவிலியர்ஸ் முன்னேற்றம்:

இந்தியாவுக்கு எதிராக ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 189 ரன்கள் எடுத்த தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ், 872 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்து முதன்முறையாக "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். 

ஏற்கனவே இவர், டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையிலும் "நம்பர்-1' இடத்தில் உள்ளார். இதன்மூலம் ஒரே நேரத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங்கில் முதலிடம் வகிக்கும் 9வது வீரர் என்ற பெருமை பெற்றார். 

தென் ஆப்ரிக்கா சார்பில் காலிஸ், ஆம்லாவுக்கு பின் இந்த இலக்கை எட்டிய மூன்றாவது வீரரானார். தவிர இவர், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நடப்பு ஆண்டுக்கான ஐ.சி.சி., டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம் பெற்றுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக "ஹாட்ரிக்' சதம் அடித்து சாதித்த, இளம் தென் ஆப்ரிக்க வீரர் குயின்டன் டி காக், 61 இடங்கள் முன்னேறி, 14வது இடம் பிடித்தார். தென் ஆப்ரிக்காவின் டுமினி (24வது இடம்), டேவிட் மில்லர் (45வது), இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (71வது) ஆகியோர் முன்னேற்றம் கண்டனர்.


ஜடேஜா பின்னடைவு:

பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (7வது இடம்), அஷ்வின் (17வது) ஆகியோர் பின்னடைவை சந்தித்தனர். இந்தியாவுக்கு எதிராக 6 விக்கெட் கைப்பற்றிய தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன், மூன்று இடங்கள் முன்னேறி, 2வது இடம் பிடித்தார். 

பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் முதலிடத்தில் நீடிக்கிறார். தென் ஆப்ரிக்காவின் டிசாட்சொபே (8வது இடம்), மார்னே மார்கல் (9வது) ஆகியோர் "டாப்-10' வரிசையில் உள்ளனர். தென் ஆப்ரிக்காவின் மெக்லாரன், முதன்முறையாக 20வது இடத்துக்கு முன்னேறினார். 

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக வேகத்தில் அசத்திய இளம் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 9 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் 7 இடங்கள் முன்னேறிய ஷமி, 43வது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, 16 இடங்கள் முன்னேறி 51வது இடம் பிடித்தார்.


இந்தியா "நம்பர்-1'

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரை இழந்த போதிலும், ஒருநாள் போட்டி அணிகளுக்கான ரேங்கிங்கில் இந்திய அணி 120 புள்ளிகளுடன் "நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறது. 

அடுத்த மூன்று இடங்களில் ஆஸ்திரேலியா (114 புள்ளி), இங்கிலாந்து (111), இலங்கை (110) அணிகள் உள்ளன. மூன்று ரேங்கிங் புள்ளிகள் கூடுதலாக பெற்ற தென் ஆப்ரிக்க அணி 110 புள்ளிகளுடன் 5வது இடத்தில் தொடர்கிறது. 

அடுத்த இரண்டு இடங்களில் பாகிஸ்தான் (100 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் (90) அணிகள் உள்ளன.

0 comments:

Post a Comment