பொங்கி எழுமா இளம் இந்தியா?

இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் நாளை ஜோகனஸ்பர்க்கில் துவங்குகிறது. இதில், இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி சாதிக்க காத்திருக்கிறது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாளை ஜோகனஸ்பர்க் மைதானத்தில் துவங்குகிறது. 

இங்கு இந்திய அணி பங்கேற்ற 3 டெஸ்டில், 2006ல் 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 1992, 1997ல் நடந்த டெஸ்ட் போட்டிகள் "டிரா' ஆகின. இம்முறை வெற்றிக்கு முயற்சிக்கலாம் என எதிர்பார்த்த நிலையில், ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக மாற்றப்பட்டிருப்பது புது சோதனையாக அமைந்துள்ளது. 

ஸ்டைன், பிலாண்டர், மார்கலின் வேகப்பந்துகள், நாகப்பாம்பு படமெடுப்பது போல திடீரென வீரர்களுக்கு முன்பு உயரமாக எழும். பீல்டர்களை நெருக்கமாக நிறுத்தும் பட்சத்தில், இந்திய பேட்ஸ்மேன்கள் தப்பிப்பது கடினம். 


அனுபவம் இல்லை:  

அணியின் "டாப்-5' வீரர்களில் முரளி விஜய் (7 டெஸ்ட்), விராத் கோஹ்லி (7), புஜாரா (2) இணைந்து மொத்தமே 16 டெஸ்டில் தான், அன்னிய மண்ணில் பங்கேற்றுள்ளனர். ரோகித் சர்மா, ஷிகர் தவான் இருவரும் இந்த கணக்கை துவக்கவே இல்லை. 

கேப்டன் தோனி, ஜாகிர் கான், இஷாந்த் சர்மாவைத் தவிர, அஷ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி என, யாரும் தென் ஆப்ரிக்க மண்ணில் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றதில்லை. 

மிகவும் கடினம்: இதுகுறித்து தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கெப்ளர் வெசல்ஸ் கூறியது:

கடந்த 2006 டெஸ்டில் இந்திய அணி இங்கு வெற்றி பெற்றது. அப்போது இருந்த சச்சின் இப்போதில்லை. ஸ்ரீசாந்த் வீணாகி விட்டார். இந்நிலையில், இளம் வீரர்கள் நிலைத்து நின்று பேட்டிங் திறமை வெளிப்படுத்துவது என்பது கடினம். 


அதிகபட்சம் "மூன்று': 

வானிலையிலும் சற்று ஈரப்பதம் இருப்பதால், பந்துகள் நன்றாக "சுவிங்' ஆகும். இந்திய வீரர்கள் அதிக ரன்கள் எடுக்க வாய்ப்பில்லை. முதல் டெஸ்ட் எப்படியும் மூன்று நாட்களுக்குள் முடிந்துவிடும். இப்போட்டியில் தென் ஆப்ரிக்க அணி ஏற்கனவே வெற்றி பெற்றது போலத்தான். 


ரன்கள் முக்கியம்: 

ஒருவேளை இதில் இந்திய வீரர்கள் தாக்குப்பிடித்து விட்டால், உலகின் வேறெந்த இடத்திலும் நன்றாக விளையாடலாம். துவக்க வீரர்கள் முதல் ஒரு மணி நேரம் சமாளித்து நிலைத்துவிட்டால், இந்திய அணியின் "மிடில் ஆர்டர்' வீரர்களுக்கு ரன்கள் சேர்ப்பது எளிதாக இருக்கும்.

ஜாகிர் கான், இஷாந்த் சர்மா என, இருவரும் வேகத்துக்கு சாதகமான ஆடுகளத்தை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம். இருப்பினும், இது இந்திய பேட்ஸ்மேன்கள் எவ்வளவு ரன்கள் எடுக்கின்றனர் என்பதைப் பொறுத்து தான் அமையும்.

இவ்வாறு கெப்ளர் வெசல்ஸ் கூறினார்.

0 comments:

Post a Comment