இந்திய அணிக்கு மரண அடி

தென் ஆப்ரிக்க மண்ணில் இந்திய அணியின் சோகம் தொடர்கிறது. டர்பன் ஒருநாள் போட்டியிலும் "பேட்டிங், "பவுலிங்', "பீல்டிங்' என எதுவுமே எடுபடாமல் போக, 134 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 
இதன் மூலம் தொடரை 0-2 என இழந்தது. தென் ஆப்ரிக்க தரப்பில் குயின்டன் டி காக், ஆம்லா சதம் அடித்து அசத்தினர்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றது. இரண்டாவது போட்டி நேற்று டர்பனில் நடந்தது. 


துவக்கம் தாமதம்: 

மைதானத்தில் நிலவிய ஈரப்பதம் காரணமாக, போட்டி துவங்குவதில் ஒன்றரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. பின் 49 ஓவராக குறைக்கப்பட்டது. இந்திய அணியில் யுவராஜ் சிங், புவனேஷ்வர் குமார், மோகித் சர்மாவுக்கு பதிலாக ரகானே, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா இடம் பெற்றனர். "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, "பீல்டிங்' தேர்வு செய்தார். 


"சூப்பர்' துவக்கம்: 

தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் டி காக், ஆம்லா ஜோடி மீண்டும் அசத்தல் துவக்கம் அளித்தது. அதிரடியாக ரன்கள் சேர்த்த குயிண்டன் பவுண்டரிகளாக விளாசினார். ஷமி பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய இவர், இத்தொடரில் வரிசையாக 2வது சதம் அடித்தார். இவர் 106 ரன்கள் எடுத்த போது அஷ்வின் "சுழலில்' சிக்கினார். 


டிவிலியர்ஸ் ஏமாற்றம்: 

பின் வந்த கேப்டன் டிவியர்ஸ் (3) ஏமாற்றினார். தொடர்ந்து வந்த மில்லர் "டக்' அவுட்டாக, ரன்வேகம் குறைந்தது. பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்த ஆம்லா, 12வது ஒருநாள் சதத்தை எட்டினார். இவர், 100 ரன்களுக்கு முகமது ஷமி "வேகத்தில்' வெளியேறினார். 

அனுபவ காலிஸ் (10) நிலைக்கவில்லை. உமேஷ் யாதவின் கடைசி ஓவரில் மெக்லாரன் ஒருசிக்சர் அடித்தார். எதிர்முனையில் பிலாண்டர் தன்பங்கிற்கு மூன்று பவுண்டரிகள் விளாச, மொத்தம் 21 ரன்கள் எடுக்கப்பட்டன .தென் ஆப்ரிக்க அணி 49 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 280 ரன்கள் எடுத்தது. 

இந்தியா சார்பில் முகமது ஷசி 3 விக்கெட் சாய்த்தார். 


விக்கெட் மடமட:

சவாலான இலக்கை துரத்திய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற "ஷாட்' அடித்தனர். ஸ்டைன் "வேகத்தில்' தவான் "டக்' அவுட்டானார். விராத் கோஹ்லியும், ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். 

ரோகித் சர்மா (19), ஆம்லாவின் "சூப்பர் கேட்ச்சில்' அவுட்டானார். ரகானே (8), அம்பயரின் தவறான முடிவால் வெளியேறினார். இப்படி தென் ஆப்ரிக்க வேகத்தில் "டாப்-ஆர்டர்' சரிய 8.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 34 ரன்கள் எடுத்து தத்தளித்தது. கேப்டன் தோனியும் (19) விரைவில் நடையை கட்ட, கதை முடிந்தது. 

ரெய்னா (36) சிறிது நேரம் தாக்குப்பிடித்தார். ரவிந்திர ஜடேஜா (26), அஷ்வின் (15) ஏமாற்றினர். "டெயிலெண்டர்களும்' வந்த வேகத்தில் வெளியேற இந்திய அணி 35.1 ஓவரில் 146 ரன்களுக்கு "ஆல் அவுட்டாகி' தோல்வி அடைந்தது. 
தென் ஆப்ரிக்க அணிக்கு "வேகத்தில்' மிரட்டிய டிசாட்சொபே 4, ஸ்டைன் 3, மார்னே மார்கல் 2 விக்கெட் கைப்பற்றினர். 


ஆம்லா "4000'

நேற்றைய போட்டியில் தென் ஆப்ரிக்க வீரர் ஆம்லா, 59 ரன்கள் எடுத்த போது ஒருநாள் அரங்கில் தனது 4000வது ரன்னை பதிவு செய்தார். இதன் மூலம் குறைந்த இன்னிங்சில் (81 இன்னிங்ஸ்) இம்மைல்கல்லை எட்டிய வீரர்கள் வரிசையில், முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்சை (88) பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார். மூன்றாவது இடத்தில் இந்திய வீரர் கோஹ்லி (93) உள்ளார். 

* தவிர, இம்மைல்கல்லை எட்டிய தென் ஆப்ரிக்க வீரர்கள் வரிசையில், கேப்டன் டிவிலியர்சை (105) பின்னுக்குதள்ளி ஆம்லா (81) முதலிடம் பிடித்தார். 

0 comments:

Post a Comment