சச்சினை நினைவுபடுத்திய கோஹ்லி

விராத் கோஹ்லியின் பேட்டிங்கை பார்க்கும் போது, எனக்கு சச்சின் தான் நினைவுக்கு வந்தார்,'' என, தென் ஆப்ரிக்க அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஆலன் டொனால்டு தெரிவித்தார்.
இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ஜோகனஸ்பர்க்கில் நடக்கிறது. 

முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணியின் வேகப்புயல்கள் ஸ்டைன், மார்கல், பிலாண்டரை சமாளித்த விராத் கோஹ்லி, சதம் அடித்து அசத்தினார். 

தவிர, தென் ஆப்ரிக்க மண்ணில் களமிறங்கிய முதல் டெஸ்டில் சதம் அடித்த பிரவீண் ஆம்ரே, சேவக்கிற்கு அடுத்து, கோஹ்லிக்கு இப்பெருமை கிடைத்தது. இத்துடன் இந்த ஆண்டில் அதிக சதம் (6) அடித்த வீரர்கள் பட்டியலில் டிவிலியர்ஸ், ஷிகர் தவானுடன் கோஹ்லியும் இணைந்தார்.

இதுகுறித்து தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்டு கூறியது:

சச்சினுக்குப் பின் 4வது இடத்தில் யார் வரவுள்ளனர் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த இடத்தில் களமிறங்கிய கோஹ்லி, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த 1996ல் இந்திய அணி இங்கு வந்த போது, சச்சின் இப்படித்தான் விளையாடினார். 

இத்தொடரின் போது, இந்திய வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் சச்சின் மட்டும் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடினார். 

இதனால், கோஹ்லியின் பேட்டிங்கை பார்த்த போது, எனக்கு சச்சின் தான் நினைவுக்கு வந்தார். துல்லியமான பந்துகளை விட்டுவிட்டு, மோசமாக வீசப்பட்ட பந்துகளை விளாசினார். 

இவ்வாறு ஆலன் டொனால்டு கூறினார். 

0 comments:

Post a Comment