மழையால் தப்பியது இந்தியா

இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி மழையால் பாதியில் ரத்தானது. இதனையடுத்து இந்திய அணி "ஹாட்ரிக்' தோல்வியில் இருந்து தப்பியது. 
அபாரமாக ஆடிய தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக், கேப்டன் டிவிலியர்ஸ் சதம் அடித்தனர். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 எனக் கைப்பற்றிய தென் ஆப்ரிக்க அணி கோப்பை வென்றது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற தென் ஆப்ரிக்கா 2-0 என தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி செஞ்சுரியனில் நேற்று நடந்தது. இதில் ஆறுதல் வெற்றி பெறும் நோக்கில் இந்தியா களமிறங்கியது.


ஸ்டைன் இல்லை:

தென் ஆப்ரிக்க அணியில் ஸ்டைன், மார்னே மார்கல், காலிசிற்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இவர்களுக்கு பதிலாக ஹென்ரி டேவிட்ஸ், பார்னல், இம்ரான் தாகிர் சேர்க்கப்பட்டனர். இந்திய அணியில் ரகானே நீக்கப்பட்டு யுவராஜ் சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். "டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ், "பேட்டிங்' தேர்வு செய்தார்.


"டாப்-ஆர்டர்' சரிவு:

கடந்த போட்டியில் சதம் அடித்து அசத்திய தென் ஆப்ரிக்காவின் ஹசிம் ஆம்லா (13), இம்முறை முகமது ஷமி பந்தில் அவுட்டானார். இஷாந்த் சர்மா "வேகத்தில்' ஹென்றி டேவிட்ஸ் (1), டுமினி (0) வெளியேறினர். இதையடுத்து 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.


குயின்டன் அபாரம்:

பின் இணைந்த குயின்டன் டி காக், கேப்டன் டிவிலியர்ஸ் ஜோடி அசத்தியது. மீண்டும் ஒருமுறை இந்திய பந்துவீச்சை பதம்பார்த்தார் குயின்டன். இவர், உமேஷ் யாதவ் ஓவரில் இரண்டு பவுண்டரி மற்றும் கோஹ்லி பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். 

தொடர்ந்து அசத்திய இவர், இத்தொடரில் தனது "ஹாட்ரிக்' சதத்தை பதிவு செய்தார். இது, ஒருநாள் போட்டியில் இவரது 4வது சதம். நான்காவது விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்த போது, 120 பந்தில் 101 ரன்கள் (2 சிக்சர், 9 பவுண்டரி) எடுத்த குயின்டன், இஷாந்த் பந்தில் போல்டானார்.


டிவிலியர்ஸ் அதிரடி:

மறுமுனையில் அதிரடி காட்டிய டிவிலியர்ஸ், பவுண்டரி அடித்து தனது ரன் கணக்கை துவக்கினார். முகமது ஷமி வீசிய 37வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் அடித்த டிவிலியர்ஸ், ஒருநாள் போட்டியில் தனது 16வது சதத்தை பூர்த்தி செய்தார். 

அஷ்வின் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட டிவிலியர்ஸ் 101 பந்தில் 109 ரன்கள் (5 சிக்சர், 6 பவுண்டரி) எடுத்த போது உமேஷ் யாதவ் பந்தில் அவுட்டானார்.


மில்லர் அரைசதம்:

அடுத்து வந்த மெக்லாரன் (6) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய டேவிட் மில்லர், சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். முகமது ஷமி பந்தை சிக்சருக்கு அனுப்பிய மில்லர், ஒருநாள் போட்டியில் தனது 6வது அரைசதம் அடித்தார். முகமது ஷமியிடம் பார்னல் (9), பிலாண்டர் (0) சரணடைந்தனர்.

தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 301 ரன்கள் எடுத்தது. மில்லர் (56), டிசாட்சொபே (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

 இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 4, முகமது ஷமி 3, உமேஷ் யாதவ் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.


மழை குறுக்கீடு:

பின், மழை காரணமாக போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால், போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்ரிக்கா 2-0 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக் வென்றார்.

அடுத்து இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஜோகனஸ்பர்க்கில் வரும் டிச., 18ல் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட், டர்பனில் வரும் டிச., 26ல் ஆரம்பமாகிறது.


இஷாந்த் "100'

நேற்று "வேகத்தில்' அசத்தி 4 விக்கெட் வீழ்த்திய இந்தியாவின் இஷாந்த் சர்மா, ஒருநாள் போட்டியில் தனது 100வது விக்கெட்டை பதிவு செய்தார். தவிர, இம்மைல்கல்லை எட்டிய 16வது இந்திய பவுலரானார்.

* இதுவரை இவர், 70 போட்டியில் 100 விக்கெட் வீழ்த்திய இவர், குறைந்த போட்டிகளில் இந்த இலக்கை எட்டிய 5வது இந்திய பவுலரானார். முன்னதாக இந்தியாவின் இர்பான் பதான் (59 போட்டி), ஜாகிர் கான் (65), அஜித் அகார்கர் (67), ஜவகல் ஸ்ரீநாத் (68) ஆகியோர் இச்சாதனை படைத்தனர்.


300

நடப்பு ஆண்டில் விளையாடிய ஒருநாள் போட்டிகளில், இந்திய அணி 10வது முறையாக 300 அல்லது அதற்கு மேல் ரன்களை வாரி வழங்கியது. இதன்மூலம் ஒரு ஆண்டில் அதிகமுறை இப்படி ரன்கள் கொடுத்த அணிகள் வரிசையில், முதலிடம் பெற்றது. இதற்கு முன், இந்திய அணி 2009ல் 9 முறை, 300 அல்லது அதற்கு மேல் ரன்கள் கொடுத்தது.


பீல்டிங் சொதப்பல்

நேற்று இந்திய அணியின் "பீல்டிங்' சொதப்பலாக இருந்தது. குயின்டன் டி காக், ரன் எதுவும் எடுக்காமல் இருந்த போது கிடைத்த "ரன்-அவுட்' வாய்ப்பை ரோகித் சர்மா கோட்டைவிட்டார். பின், 37 ரன்கள் எடுத்திருந்த போது, உமேஷ் யாதவ் பந்தில் கொடுத்த "கேட்ச்' வாய்ப்பை ரகானே கோட்டைவிட்டார். 

அடுத்து இவர் 43 ரன்கள் எடுத்த போது, அஷ்வின் பந்தில் கொடுத்த "கேட்ச்' 
வாய்ப்பை யுவராஜ் சிங் நழுவவிட்டார். இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட குயின்டன் டி காக், "ஹாட்ரிக்' சதம் அடித்து அசத்தினார்.


"ஹாட்ரிக்' சதம்

நேற்று 101 ரன்கள் எடுத்த தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக், ஒருநாள் போட்டியில் "ஹாட்ரிக்' சதம் அடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமை பெற்றார். 

* தவிர, இம்மைல்கல்லை எட்டிய மூன்றாவது தென் ஆப்ரிக்க வீரரானார். முன்னதாக தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ், டிவிலியர்ஸ் ஆகியோர் இச்சாதனை படைத்திருந்தனர்.

* இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து மூன்று சதம் அடித்த இரண்டாவது வீரரானார். முன்னதாக பாகிஸ்தானின் ஜாகிர் அபாஸ் இம்மைல்கல்லை எட்டினார்.

0 comments:

Post a Comment