அதிக ரன்களுக்கான சாதனையை நோக்கி இந்தியா

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஜோகனஸ்பர்க் நகரில் நடக்கவுள்ள முதல் ஒருநாள் போட்டியின் மூலம், ஒட்டுமொத்தமாக அதிக ரன் எடுத்த அணி என்ற புதிய சாதனை படைக்க காத்திருக்கிறது இந்தியா.

சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில், அதிக போட்டிகளில் பங்கேற்ற அணிகள் வரிசையில், 841 போட்டியில் விளையாடியுள்ள இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. 

இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா (825 போட்டி) உள்ளது. இவ்விரு அணிகள் ஒட்டுமொத்தமாக தலா ஒரு லட்சத்து 82 ஆயிரத்து, 881 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் எடுத்த அணிகள் வரிசையில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ஜோகனஸ்பர்க்கில் டிச., 5ல் நடக்கவுள்ள முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி, தனது முதல் ரன்னை எடுக்கும் போது, ஒட்டு மொத்தமாக அதிக ரன்கள் எடுத்த அணிகள் வரிசையில், ஆஸ்திரேலியாவை பின்தள்ளி முதலிடம் பிடித்து, புதிய சாதனை படைக்க உள்ளது. 

இப்பட்டியலில், மூன்றாவது இடத்தில் 807 போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி (ஒரு லட்சத்து 71 ஆயிரத்து, 982 ரன்கள்) உள்ளது. அடுத்த இரண்டு இடங்களில் இலங்கை (701 போட்டி, ஒரு லட்சத்து 46 ஆயிரத்து, 365 ரன்கள்), வெஸ்ட் இண்டீஸ் (705 போட்டி, ஒரு லட்சத்து 45 ஆயிரத்து, 260 ரன்கள்) உள்ளன.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை அடுத்து, நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதால், இப்பட்டியலில் இன்னும் சிறிது காலம் இந்திய அணி முதலிடத்தில் நீடிக்கும். ஏனெனில் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு பின் தான், ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.


தோனியின் சாதனை: 

தென் ஆப்ரிக்க பயணத்தின் போது இந்திய கேப்டன் தோனி இரண்டு சாதனை படைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 151 ஒருநாள் போட்டியில் 5213 ரன்கள் எடுத்துள்ள தோனி, இன்னும் 26 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன்கள் வரிசையில் முகமது அசாரை பின்தள்ளி (174 போட்டி, 5239 ரன்கள்) முதலிடம் பிடிக்கலாம். 

தோனி தலைமையிலான இந்திய அணி, இதுவரை 88 ஒருநாள் போட்டிகளில் வென்றுள்ளது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை, இந்திய அணி 3-0 என முழுமையாக கைப்பற்றும் பட்சத்தில், ஒருநாள் போட்டியில் அதிக வெற்றிகளை பதிவு செய்த இந்திய கேப்டன்கள் வரிசையில், முன்னாள் கேப்டன் முகமது அசாரை (90 வெற்றி) பின்தள்ளி முதலிடம் பிடிக்கலாம்.

0 comments:

Post a Comment