ஆசிய கோப்பை கிரிக்கெட்டுக்கு சிக்கல்

வங்கதேசத்தில் நடக்கவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு, புதிய வடிவத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் 2014, பிப்., 24 முதல் மார்ச் 8 வரை இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட், வரும் மார்ச் 16 முதல் ஏப்., 6 வரை "டுவென்டி-20' உலக கோப்பை தொடர்கள் நடக்கவுள்ளன. 

வங்கதேசத்தில் நடக்கும் கலவரம், பாகிஸ்தான் அணி மறுப்பு காரணமாக, உலக கோப்பை "டுவென்டி-20' தொடரை இந்தியாவுக்கு மாற்ற பரிசீலனை நடக்கிறது. தற்போது ஆசிய கோப்பை போட்டிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இப்போட்டியை ஒளிபரப்ப, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி.,) நிம்பஸ் "டிவி' நிறுவனத்துடன் 10 ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளது. 2012ல் வங்கதேசத்தில் ஆசிய போட்டி நடந்தது. மீண்டும் இங்கு நடத்த, "டிவி' நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து, ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக, 'நோட்டீஸ்' அனுப்பியது. 

அதேநேரம், ஏ.சி.சி., தலைவராக இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) சீனிவாசன் தான் உள்ளார். இருப்பினும், 1990-91 முதல் ஆசிய கோப்பை தொடரை இந்தியாவில் நடத்தவில்லை. 

அரசியல் மற்றும் ஒளிபரப்பு ஒப்பந்தம் உட்பட பல காரணங்களுக்காக, 2014 ஆசிய கோப்பை தொடர் குறித்து, பி.சி.சி.ஐ., முடிவு எடுக்கவில்லை. இதுகுறித்து சீனிவாசனிடம் கேட்ட போது, பதிலளிக்க மறுத்துவிட்டார்.

 ஏ.சி.சி., தலைமை அதிகாரி சையது அஷ்ரபுல் கூறுகையில், ""ஒளிபரப்பு பிரச்னையால் தொடரை ரத்து செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. புதிய ஏலம் குறித்து அறிவித்துள்ளோம். போட்டியை இந்தியா அல்லது இலங்கைக்கு மாற்ற முயற்சிகள் நடக்கின்றன,'' என்றார்.

வங்கதேசத்தில் 2014, ஜன. 5ல் தேர்தல் முடிந்துவிடும் என்பதால், ஆசிய போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு போதிய பாதுகாப்பு தரப்படும். தொடரை மாற்ற வேண்டாம் என, வங்கதேசம் தெரிவிக்கிறது. இதனால், குழப்பமான நிலை நீடிக்கிறது.

0 comments:

Post a Comment