அதிர்ச்சி அளித்த முடிவு - விராத் கோஹ்லி

வெற்றி பெற வேண்டிய போட்டியை, கடைசி நேரத்தில் தென் ஆப்ரிக்க அணி "டிரா' செய்தது அதிர்ச்சியாக உள்ளது,'' என, இந்திய வீரர் விராத் கோஹ்லி தெரிவித்தார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. ஜோகனஸ்பர்க்கில் நடந்த முதல் டெஸ்ட், கடைசி நேரத்தில் "டிரா' ஆனது. 

டுபிளசி அவுட்டான போது, தென் ஆப்ரிக்க அணியின் வெற்றிக்கு, 19 பந்தில் 16 ரன்கள் தேவைப்பட்டன. மூன்று விக்கெட் கைவசம் இருந்த போதும், வெற்றிக்கு முயற்சிக்கவில்லை. 

இதுகுறித்து விராத் கோஹ்லி கூறியது:

முதல் டெஸ்டின் முதல் நான்கு நாட்களில், இரு அணிகளும் போராட்ட குணத்தை வெளிப்படுத்தின. ஒவ்வொரு முறையில் மீண்டு வர முயற்சித்தன. கடைசி நாளில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் மாறி மாறி வந்தன. 

முதலில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், உணவு இடைவேளைக்குப் பின் மேலும் சில விக்கெட்டுகள் எடுத்திருந்தால், வெற்றி பெற்றிருப்போம். டிவிலியர்ஸ், டுபிளசி இணைந்து இதை தடுத்து விட்டனர். 

பின், டிவிலியர்ஸ், டுமினி வெளியேறியதும் சற்று வாய்ப்பு வந்தது. ஆனால், பிலாண்டர் அதிரடியாக ரன்கள் சேர்க்க, மீண்டும் சிக்கலானது. அடுத்து டுபிளசி ரன் அவுட்டானதும் மறுபடியும் வெற்றி வாய்ப்பு வந்தது. 

கடைசியில், தென் ஆப்ரிக்க அணி போட்டியை "டிரா' செய்தது அனைவருக்கும் வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. களத்தில் பிலாண்டர் இருந்த நிலையில், ஓவருக்கு 8 ரன்கள் எடுத்தால் போதும். இதற்கு முன் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ள பிலாண்டரால், இந்த ரன்களை எடுத்திருக்க முடியும். 

எங்களது திட்டமெல்லாம் எப்படியும் மீதமுள்ள மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி விட வேண்டும் என்பது தான். இதற்காக தீவிரமாக முயற்சித்தோம். ஆனால், அவர்கள் வெற்றிக்கு முயற்சிக்காமல், பந்துகளை வீணடிப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. 

ஏன் இப்படிச் செய்தனர் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும், இது சிறந்த முடிவு தான். "நம்பர்-1' அணிக்கு எதிராக விளையாடும் போது, இதெல்லாம் எதிர்பார்த்தது தான். ஏனெனில், அவர்களை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதல்ல. 

இவ்வாறு விராத் கோஹ்லி தெரிவித்தார்.

0 comments:

Post a Comment