உலக கோப்பை கிரிக்கெட் - இந்தியா-பாகிஸ்தான் மோதல்ஐ.சி.சி., உலக கோப்பை (19 வயதுக்குட்பட்டோருக்கான) தொடரில், "நடப்பு சாம்பியன்' இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானுடன் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), அடுத்த ஆண்டு பிப்., 14ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை 19 வயதுக்குட்பட்டோருக்கான 10வது ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. 

இதில் தலா மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 16 அணிகள், 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதும். 

ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், "நாக்-அவுட்' (காலிறுதி, அரையிறுதி, பைனல்) சுற்றுக்கு முன்னேறும். மொத்தம் 16 நாட்கள் நடக்கும் இத்தொடரில் பைனல், அரையிறுதி உட்பட 48 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகள் அபுதாபி, துபாய், சார்ஜாவில் உள்ள ஏழு மைதானங்களில் நடக்கவுள்ளன.

இத்தொடருக்கான அட்டவணை, துபாயில் நேற்று வெளியிடப்பட்டது. இதில் "நடப்பு சாம்பியன்' இந்திய அணி "ஏ' பிரிவில் பாகிஸ்தான், ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. 

"பி' பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நமீபியா, "சி' பிரிவில் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, கனடா, "டி' பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, யு.ஏ.இ., அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை பிப்., 15ல் துபாயில் சந்திக்கிறது. பிப்., 14ல் நடக்கவுள்ள முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து-யு.ஏ.இ., (இடம்-அபுதாபி), ஜிம்பாப்வே-கனடா (இடம்-அபுதாபி), இலங்கை-நியூசி., (இடம்-சார்ஜா), தென் ஆப்ரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் (இடம்-துபாய்) அணிகள் மோதுகின்றன. இத்தொடருக்கான முழு அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.

முன்னதாக நடந்த இத்தொடரில், இந்தியா (2000, 2008, 2012), ஆஸ்திரேலியா (1988, 2002, 2010) அணிகள் அதிகபட்சமாக தலா 3 முறை கோப்பை வென்றன. பாகிஸ்தான் அணி இரண்டு முறை (2004, 2006) சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த 1998ல் இங்கிலாந்து அணி கோப்பை வென்றது.

0 comments:

Post a Comment