வெற்றியுடன் விடைபெற்றார் காலிஸ்

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டர்பன் டெஸ்டில், இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த தென் ஆப்ரிக்க ‛ஆல்-ரவுண்டர்’ காலிஸ் வெற்றியுடன் விடைபெற்றார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் "டிரா'வில் முடிந்தது. இரண்டாவது டெஸ்ட் டர்பனில் நடக்கிறது. 

இந்திய அணி முதல் இன்னிங்சில் 334 ரன்கள், தென்ஆப்ரிக்க அணி 500 ரன்கள் எடுத்தது. நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 68 ரன்கள் எடுத்து, 98 ரன்கள் பின் தங்கியிருந்தது. புஜாரா(32), கோஹ்லி (11) அவுட்டாகாமல் இருந்தனர்.  

இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு ஸ்டைன் வீசிய முதல்பந்தில் விராத் கோஹ்லி (11) அவுட்டானார். தொடர்ந்து புஜாராவும் (32) ஸ்டைன் வேகத்தில் ‘போல்டானார்’. ரோகித் சர்மா (25) நிலைக்கவில்லை. 

பின் வந்த கேப்டன் தோனி (15) நிலைக்கவில்லை. தொடர்ந்து வந்த ஜாகிர் கான் கைகொடுக்க, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தய ரகானே, அரைசதம் கடந்தார். அடுத்து வந்த ஜாகிர் கான் (3), இஷாந்த் சர்மா (1) ஏமாற்றினர். 

பொறுப்பாக ஆடிய ரகானே 96 ரன்னில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 223 ரன்களுக்கு ‛ஆல்-அவுட்’ ஆனது. தென் ஆப்ரிக்கா சார்பில் ராபின் பீட்டர்சன் 4, ஸ்டைன், பிலாண்டர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

சுலப இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் ஸ்மித், அல்விரோ பீட்டர்சன் ஜோடி நம்பிக்கை அளித்தது. இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

ஸ்மித் (27), பீட்டர்சன் (31) அவுட்டாகாமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்ரிக்க அணி 1-0  என கைப்பற்றி கோப்பை வென்றது.       

0 comments:

Post a Comment