சச்சின் கனவு பலிக்குமா?

சச்சின் கவனம், தற்போது கால்பந்து பக்கம் திரும்பியுள்ளது. வரும் 2022ல் நடக்கும் உலக கோப்பை கால்பந்து தொடருக்கு இந்தியா தகுதி பெறும் என, நம்பிக்கை தெரிவித்தார்.
வரும் 2017ல் உலக (17 வயதுக்குட்பட்டோர்) கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவில் நடக்கவுள்ளது. இதன் மூலம், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (பிபா) மிகப்பெரிய தொடரை முதல் முறையாக நடத்துகிறது. 

இந்நிலையில், அடுத்த ஆண்டு பிரேசிலில் நடக்க உள்ள உலக கோப்பை தொடருக்கான தங்க கோப்பை இந்திய மக்களின் பார்வைக்காக கோல்கட்டா வந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் கூறியது: 

வரும் 2014ல் நடக்க உள்ள உலக கோப்பை தொடருக்கு இந்திய அணி தகுதி பெறவில்லை. 2022ல் விளையாடுவதே இலக்காக இருக்க வேண்டும். இது, ஒரே இரவில் நடந்துவிடாது. 

படிப்படியாக செயல்படுத்த வேண்டும். இதற்கான அடித்தளத்தை இளம் வீரர்களுக்கு உருவாக்கி தருவது அவசியம். கடின பயிற்சி, சரியான திட்டமிடல் முக்கியம். இதன்படி செயல்பட்டால், சாம்பியனாக உருவாக முடியும். என் ஆதரவு என்றும் இளம் கால்பந்து வீரர்களுக்கு உண்டு. 

கோல்கட்டா வந்துள்ள "பிபா' உலக கோப்பையை எல்லா மக்களும் வந்து ரசிப்பர் என நம்புகிறேன். இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் செத்ரி மீது மரியாதை உள்ளது.என்னை விட கால்பந்து விளையாட்டை வித்தியாசமான கண்ணோட்டத்துடன் பார்ப்பார். 


நினைவில் உள்ளது:

இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை 1983ல் முதல் முறையாக வென்றது. கேப்டன் கபில்தேவ் வெற்றிக்கோப்பையை, கையில் வைத்திருந்ததை பார்த்தேன். அப்போதே, இந்த இடத்திற்கு நானும் வர வேண்டும் என எனக்குள் சொல்லிக் கொண்டேன். 

கடந்த 2011ல் நடந்த உலக கோப்பை தொடர் பைனலில் பங்கேற்க, என் காரிலிருந்து இறங்கி, அணிக்கான பஸ்சில் ஏறினேன். இதில் வெற்றி பெற்றவுடன், என் வாழ்க்கை முழுமையடைந்ததை உணர்ந்தேன். இந்த கனவு நிஜமாக எனக்கு 22 ஆண்டுகள் தேவைப்பட்டன. 

இவ்வாறு சச்சின் கூறினார்.

0 comments:

Post a Comment