தடுமாறும் மிடில் ஆர்டர் - சிக்கலில் ரெய்னா, யுவராஜ்

சமீபத்திய தோல்விகளுக்கு "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படாததே காரணம்,'' என, இந்திய கேப்டன் தோனி புகார் கூறினார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டிகளில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, தொடரை இழந்தது.

இதற்கு அணியின் "மிடில் ஆர்டர்' வீரர்கள் யுவராஜ் சிங், ரெய்னாவின் நிலையற்ற பேட்டிங்கும் ஒரு காரணம். யுவராஜ் சிங் இந்த ஆண்டு பங்கேற்ற 17 ஒருநாள் போட்டிகளில் 274 ரன்கள் (2 அரை சதம்) தான் எடுத்துள்ளார். சராசரி 19.71 ரன்கள். தென் ஆப்ரிக்க மண்ணில் விளையாடிய 11 போட்டிகளில் 211 ரன்கள் (23.44) எடுத்தார்.

ரெய்னா இவரைவிட பரவாயில்லை. கடைசியாக விளையாடிய 33 போட்டிகளில் 770 ரன்கள் (சராசரி 35.00) அடித்துள்ளார். தொடர்ந்து "ஷார்ட் பிட்ச்' பந்துகளில் தடுமாறுகிறார். 

இதுகுறித்து இந்திய அணி கேப்டன் தோனி கூறியது:

கடந்த சில தொடர்களாக "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சொதப்புகின்றனர். இது அணிக்கு நெருக்கடியாக அமைகிறது. சமீபத்திய போட்டிகளில் திறமை வெளிப்படுத்தி வந்த "டாப் ஆர்டர்' வீரர்கள், தென் ஆப்ரிக்க தொடரில் விரைவில் அவுட்டாகினர். 

"மிடில் ஆர்டர்' பலவீனமும் நன்கு வெளிப்பட்டது. இந்த வீரர்கள் தங்களது ஆட்டம் குறித்து மதிப்பீடு செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளது. 

டர்பன் ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஏதுவாக இருந்தது. இந்நிலையில், சரியான முறையில் பந்துகளை தேர்வு செய்து அடிக்காமல், கோட்டை விட்டது தான் ஏமாற்றத்துக்கு காரணம். 


ஷமி அபாரம்:

பவுலிங்கை பொறுத்தவரையில் ஜோகனஸ்பர்க் போட்டியை விட, டர்பனில் முகமது ஷமி நன்கு பந்துவீசினார். பந்தை "சுவிங்' செய்வது, சரியான அளவில் வீசுவது என, இங்குள்ள சூழலுக்கு ஏற்ப செயல்பட்டார்.


எல்லாம் சகஜம்:

வெளிநாடுகளுக்கு போட்டிகளில் பங்கேற்க செல்லும் போதெல்லாம், "ஷார்ட் பிட்ச்' பந்தில் திணறுவது குறித்து பேசுகின்றனர். ஏனெனில், துணைக்கண்டத்து ஆடுகளங்களில் இந்த முறையில் அதிகம் பந்துவீசுவதில்லை. 

மொத்தத்தில் சில போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கலாம். சில போட்டிகளில் தோல்வியடைந்து இருக்கலாம். இதில் இருந்து என்ன கற்றுக் கொண்டோம் என்பது தான் முக்கியம். முதல் போட்டியில் பவுலிங் சரியில்லை. அடுத்த முறை பேட்டிங்கில் ஏமாற்றம் கிடைத்தது. அடுத்த போட்டியில் வெற்றிக்கு முயற்சிப்போம்.

இவ்வாறு தோனி கூறினார்.

0 comments:

Post a Comment