சூதாட்ட வலையில் நியூசி., வீரர்கள்

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட மூன்று முன்னாள் நியூசிலாந்து வீரர்கள் சிக்கினர். இவர்களிடம் ஐ.சி.சி., விசாரணை நடத்தி வருகிறது.
நியூசிலாந்து அணியின் முன்னாள் "ஆல்-ரவுண்டர்' கிறிஸ் கெய்ர்ன்ஸ். இவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் தான் பிரிமியர் தொடருக்கான ஏலத்தில் சேர்க்கவில்லை என, அப்போதைய தலைவர் லலித் மோடி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக இங்கிலாந்து கோர்ட்டில் வழக்கு தொடுத்த கெய்ர்ன்ஸ், தான் குற்றமற்றவர் என நிரூபித்தார்.

இந்நிலையில் "நியூசிலாந்து ஹெரால்டு' பத்திரிகை வெளியிட்ட செய்தியில்,""கெய்ர்ன்ஸ், டேரல் டபி, லூ வின்சென்ட் ஆகிய மூன்று முன்னாள் நியூசிலாந்து வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இவர்களிடம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐ.சி.சி.,) ஊழல் தடுப்பு மைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்,''என, தெரிவிக்கப்பட்டது.

இதனை உறுதி செய்த லூ வின்சென்ட் கூறுகையில்,""ஐ.சி.சி., விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். இது தொடர்பாக வெளிப்படையாக கருத்து எதுவும் கூற முடியாது,''என்றார்.

சர்ச்சைக்குரிய கெய்ர்ன்ஸ் கூறுகையில்,""சூதாட்டம் தொடர்பான வழக்கில் எனக்கு சாதகமாக இங்கிலாந்து கோர்ட் ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளது. தற்போது "மீடியாவில்' வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. என்னை ஐ.சி.சி., மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகிகள் யாரும் தொடர்பு கொள்ளவில்லை,''என்றார்.


ஐ.சி.சி., ஒப்புதல்:

தற்போதைய சூதாட்டம் எங்கு நடந்தது, எந்த போட்டியில் நடந்தது என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை. விசாரணை நடப்பதை ஒப்புக் கொண்ட ஐ.சி.சி., சம்பந்தப்பட்ட வீரர்களின் பெயரை வெளியிட மறுத்தது. 

இது குறித்து ஐ.சி.சி., வெளியிட்ட அறிக்கையில்,""கடந்த சில மாதங்களாக ஊழல் தடுப்பு அதிகாரிகள் நியூசிலாந்தில் முகாமிட்டு விசாரணை நடத்துவது உண்மை தான். விசாரணை தொடர்ந்து நடப்பதாலும், யார் மீதும் குற்றம் பதிவு செய்யப்படாததாலும் பெயர்களை வெளியிட முடியாது,''என, தெரிவிக்கப்பட்டது.

நியூசிலாந்து கிரிக்கெட் போர்டின் தலைமை அதிகாரி டேவிட் ஒயிட் கூறுகையில்,""தற்போது விளையாடும் வீரர்கள் யாரும் விசாரிக்கப்படவில்லை. சந்தேகத்துக்கு உரிய போட்டிகள் எதுவும் நியூசிலாந்து மண்ணில் நடக்கவில்லை,''என்றார்.


பிரதமர் கவலை:

வரும் 2015ல் நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. இந்தச்சூழலில் சூதாட்ட புயல் காரணமாக, நியூசிலாந்து அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ கூறுகையில்,""நியூசிலாந்து மிகவும் நேர்மையான நாடு என்ற கருத்து இருக்கிறது. தற்போதைய சூதாட்ட புகார் மிகுந்த கவலை அளிக்கிறது,''என்றார்.

0 comments:

Post a Comment