தோல்விக்கு காரணம் பவுலர்கள் - தோனி குற்றச்சாட்டு

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அடைந்த தோல்விக்கு பவுலிங் சரியில்லாதது தான் காரணம்,'' என, இந்திய கேப்டன் தோனி தெரிவித்தார். 
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. 

ஜோகனஸ்பர்க்கில் நடந்த முதல் போட்டியில், முதலில் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி, 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 358 ரன்கள் எடுத்தது. கடின இலக்கை துரத்திய இந்திய அணி, 41 ஓவரில் 217 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 141 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இதுகுறித்து கேப்டன் தோனி கூறியது:

ஜோகனஸ்பர்க்கில் 300 ரன்னுக்கும் மேல் எடுக்கக் கூடிய அளவுக்கு ஆடுகளம் இல்லை. இன்னும் சற்று நன்கு பவுலிங் செய்திருக்கலாம். இங்குள்ள சூழ்நிலை குறித்த அனுபவ அறிவு முக்கியம். 

இந்த ஆடுகளத்தில் எந்த வேகத்தில், எந்த அளவில் பவுலிங் செய்ய வேண்டும் என்பது, தென் ஆப்ரிக்க வீரர்களுக்கு அத்துபடி. இந்நிலையில், 300 அல்லது இதற்கு மேல் ரன்கள் விட்டுத்தருவதால், பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுவிடுகிறது. 

இந்திய அணி பவுலர்கள் சொதப்பலால், சமீபத்தில் முடிந்த 9 போட்டிகளில், 300 ரன்களுக்கும் மேல் விட்டுக் கொடுத்துள்ளனர். 

தவிர, கூடுதல் பீல்டரை உள்வட்டத்துக்குள் நிற்க வைப்பது என்ற புதிய விதி மற்றும் சரியான முறையில் "சுவிங்' செய்ய முடியாத காரணங்களால், இப்போதெல்லாம் கடைசி கட்ட ஓவர்களில், பவுலர்கள் அதிக ரன்களை தருகின்றனர். இதற்கு உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் கூட தப்பமுடியவில்லை.

கடைசி 10 ஓவர்களில் ரன்கள் அதிகம் போகிறது என்ற நிலையில், இதுபோன்ற மைதானங்களில், புதிய பந்தில் துவக்க பவுலர்கள் நன்கு செயல்பட வேண்டும். முதல் 10 ஓவர்களில் விக்கெட் வீழ்த்தினால், போட்டியில் நடுவில் கூடுதல் நெருக்கடி தரலாம். 

இதனால், கடைசி நேரத்தில் அதிரடியாக ரன்கள் சேர்க்க, கைவசம் விக்கெட் இல்லாமல் செய்ய முடியும். 

இப்படி திட்டமிட்டுவது எல்லாம் சரிதான். கடைசியில் களத்தில் எதுவும் எடுபடாமல் போகிறது. அனைத்து பவுலர்களும் 50 ரன்னுக்கும் மேல் கொடுத்தனர். முகமது ஷமி மட்டும் ஆறுதல் தந்தார். 

இவ்வாறு தோனி கூறினார். 

0 comments:

Post a Comment