பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடியது. இதன் 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது. ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
டெல்லியில் நடந்த கடைசி போட்டியில் இந்திய அணி 10 ரன்னில் வென்று ஆறுதல் வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் டோனிக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.
டோனிக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்தப்போட்டியில் இந்தியாவின் அதிக ஸ்கோராக டோனி 36 ரன் எடுத்தார். உமர்அக்மலை ஸ்டம்பிங் செய்தார். அஜ்மல் கேட்சை பிடித்தார். ஆனால் மிஸ்பா கேட்சை தவறவிட்டார்.
அந்த ஆட்டத்தில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டும், புதுமுக வீரர் புவனேஸ்குமார் 2 விக்கெட்டும் எடுத்தனர். அதோடு பாகிஸ்தான் தரப்பில் அஜ்மல் 5 விக்கெட் எடுத்தார். இவர்களை எல்லாம் விட்டுவிட்டு 36 ரன் எடுத்த டோனிக்கு ஆட்டநாயகன் விருது கொடுத்தது ஆச்சரியத்தை அளித்தது.
டெலிவிசன் வர்னணையாளர்கள்தான் ஆட்ட நாயகன் விருதுக்கான வீரரை தேர்வு செய்வார்கள். வர்னணையாளராக இருக்கும் முன்னாள் வீரர் ஒருவர்தான் டோனியை ஒருமனதாக தேர்வு செய்து உள்ளார்.
சமீப காலங்களில் இந்திய அணிக்கு ஏற்பட்ட தோல்விகளால் கேப்டன் டோனி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். அவரது மன உறுதியை அதிகரிக்கவே இந்த ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. டோனிக்கு சாதகமாக இருந்த அந்த முன்னாள் வீரர் யார் என்று தெரியவில்லை.
ஆட்டநாயகன் விருது விவகாரத்தில் பாகிஸ்தானும் அதிருப்தி அடைந்துள்ளது. சென்னையில் நடந்த போட்டியில் சதம் அடித்து வெற்றி பெற வைத்த ஜாம்ஷெட்டுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்காமல் டோனிக்கு வழங்கியதால் அதிருப்தி அடைந்துள்ளது.
வெற்றி பெற்ற அணி வீரருக்குதான் விருது வழங்கி இருக்க வேண்டும் என்று அந்த அணி நிர்வாகம் குற்றம்சாட்டியுள்ளது.
0 comments:
Post a Comment