டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இழந்த இந்திய அணி தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் இழந்ததுதான் வேதனை தருகிறது.
சொந்தமண்ணில் இந்த இரண்டு தொடர்களையும் இழந்ததற்கு மோசமான பேட்டிங்தான் காரணம். டிராவிட், லட்சுமணன் ஓய்வால் இந்திய டெஸ்ட் அணி ஆட்டம் கண்டுவிட்டது.
இந்த இருவருமே நிலைத்து நின்று ஆடுவதில் வல்லவர்கள். அவர்களுக்குரிய இடம் இன்னும் நிரப்பப்படவில்லை. டிராவிட், லட்சுமணன் போல விளையாடக்கூடிய வீரர்கள் இல்லாததால் இங்கிலாந்துக்கு எதிராக 23 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இழந்தது.
டெஸ்டில்தான் இந்திய வீரர்களின் ஆட்டம் மோசமாக இருக்கிறது என்று பார்த்தால் ஒருநாள் போட்டியிலும் பேட்டிங் சொதப்பலாகவே இருக்கிறது. காம்பீர், ஷேவாக், வீராட் கோலி, யுவராஜ் சிங் போன்ற முன்னணி வீரர்கள் யாருமே சரியாக விளையாடாததால் சொந்த மண்ணில் பாகிஸ்தானிடம் ஒரு நாள் தொடரை இழந்ததது.
பலவீனமான இந்திய பந்து வீச்சை ஈடு செய்யும் வகையில் பலமான பேட்டிங் இருந்து வந்தது. தற்போது பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடுவதால் இந்திய அணியால் தோல்வியில் இருந்து மீள இயலவில்லை.
கடந்த ஆண்டு உலக கோப்பையை இந்தியா கைப்பற்றியது. அப்போது புகழின் உச்சத்தில் இருந்த இந்திய அணி தொடர் தோல்வியால் படப்படியாக விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணி சிறப்பான வெற்றி எதையும் பெறவில்லை. ஆசிய கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை, ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் ஆட்டம் எடுபடவில்லை.
டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் அனைத்து டெஸ்டிலும் தோற்றது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2 முறையும், நியூசிலாந்துக்கு எதிராக ஒரு முறையும் மட்டும் டெஸ்ட் தொடரை வென்றது.
மோசமான நிலையில் இருக்கும் இந்திய அணி எழுச்சி பெறுவது அவசியமானது. தேர்வு குழுவினர் அணியை அதிரடியாக மாற்றங்களை செய்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.
0 comments:
Post a Comment