காமெடி போட்டியா? - சூதாட்டத்தில் சிக்கியது டில்லி மோதல்


டில்லி ஒருநாள் போட்டியில் கிரிக்கெட் சூதாட்டம் நடந்துள்ளது. பாகிஸ்தான் அணி வேண்டுமென்றே தோற்றது,'' என, இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பால் நிக்சன் சந்தேகம் தெரிவித்தார்.

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியன. முதலிரண்டு போட்டியில் வென்ற பாகிஸ்தான் அணி, தொடரை 2-0 என ஏற்கனவே வென்றது. 

முக்கியத்துவம் இல்லாத கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி, டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று முன் தினம் நடந்தது. 

இதில், முதலில் பேட் செய்த இந்திய அணி 167 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 34 ஓவரில் 113 ரன்களுக்கு 4 விக்கெட், என வலுவான நிலையில் இருந்தது. 

ஆனால், கடைசி 6 விக்கெட்டுகளை வெறும் 38 ரன்களுக்கு இழந்து, அதிர்ச்சி அளித்தது. இறுதியில் 157 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து இந்தியா 10 ரன்கள் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. 

இப்போட்டியில் கிரிக்கெட் சூதாட்டம் நடந்திருக்கலாம் என பால் நிக்சன்,42 சந்தேகம் கிளப்பியுள்ளார். இதுகுறித்து "டுவிட்டர்' இணையதளத்தில் இவர் வெளியிட்ட செய்தி:

 டில்லி போட்டியில் பாகிஸ்தான் அணி வேண்டுமென்றே தோற்றது. இப்போட்டியை பார்ப்பதற்கு ஒரே "காமெடியாக' இருந்தது. உதாரணமாக "லெக் ஸ்லிப்பில்' பீல்டர் இருந்த நிலையில் முகமது ஹபீஸ், "ஸ்வீப் ஷாட்' அடித்து அவுட்டானார். 

இந்தியா சார்பில் 12வது வீரராக யாரோ விளையாடியுள்ளார். அவர் சூதாட்ட "புக்கியாக' இருக்கலாம். ஏற்கனவே தொடரை வென்றுவிட்ட பாகிஸ்தான் அணிக்கு, மூன்றாவது போட்டியில் தோற்பது ஒரு பிரச்னையே அல்ல. இதனால் தான் இந்தியா வென்றது. 

இவ்வாறு பால் நிக்சன் கூறினார்.

உள்ளூர் சூதாட்டம்:

 கடந்த ஜூன் மாதம் பால் நிக்சன் வெளியிட்ட சுயசரிதை புத்தகத்தில்," கடந்த 2010ல் இங்கிலாந்தில் நடந்த உள்ளூர் "டுவென்டி-20' தொடரில், போட்டியில் தோற்க "கே' என்ற எழுத்தில் துவங்கும் பெயர் கொண்டவர் ரூ. 27 கோடி வரை தர முன்வந்தார்,' என, சர்ச்சை கிளப்பி இருந்தார். இப்போது, பாகிஸ்தான் போட்டி குறித்தும் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

பாக்., பயணம்: பி.சி.சி.ஐ., மறுப்பு

 இந்திய அணி, பாகிஸ்தான் வர வேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்க இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மறுத்தது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"" கடந்த 2009க்குப் பின், இதுவரை எந்த அணியும் பாகிஸ்தான் செல்லவில்லை. 

அங்குள்ள மைதானங்களின் நிலை என்ன என, யாருக்குத் தெரியும். முதலில் ஆஸ்திரேலிய அணியை அழைத்து போட்டிகளை நடத்தட்டும். அப்புறம் அங்கு செல்வது குறித்து முடிவெடுப்போம்,'' என்றார்.

0 comments:

Post a Comment