இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் தொடரில் அனல் பறப்பது நிச்சயம்,'' என, முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் தெரிவித்தார்.
அடுத்த மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பிப்., 22 முதல் மார்ச் 24 வரை) பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் சென்னையில் பிப்., 22 முதல் 26 வரை நடக்கிறது.
சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் 3வது இடத்திலுள்ள ஆஸ்திரேலிய அணி, இத்தொடரை முழுமையாக (4-0) வென்றால் 121 புள்ளிகள் கிடைக்கும்.
அதேநேரம், இப்போது முதலிடத்திலுள்ள தென் ஆப்ரிக்க அணி (124), பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-2 என இழந்தால், தரவரிசையில் நீண்ட இடைவெளிக்குப் பின், "நம்பர்-1' இடத்தை ஆஸ்திரேலியா பிடிக்கலாம்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் "அதிரடி' விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் கூறியது:
"டாப்-3' அணிகள் எல்லாமே சமபலம் பொருந்தியவை தான். இந்த அணிகள் வாய்ப்பு கிடைத்தால் ஒன்றுக்கொன்று மற்ற அணிகளை எப்போது வேண்டுமானா<லும் வீழ்த்தி விடும். இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி சமீபத்தில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.
இதனால், ஆஸ்திரேலிய அணிக்கும் கோப்பை வெல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்தொடர் சிறப்பானதாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனெனில், இரு அணிகளும் விளையாட்டுக் களத்தில் ஆக்ரோஷமான போட்டியை வெளிப்படுத்தும். எதிரணியை மிரட்ட வேண்டும் என நினைத்தால், கடுமையாக போராட வேண்டும். தவிர, காரசாரமான மோதலும் தொடருக்கு வலுசேர்க்கும்.
"சுழல்' வேண்டும்:
அதேநேரம், இந்திய மண்ணில் வெல்ல வேண்டும் எனில், சுவான், பனேசர் போன்ற தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் எப்போதும் அணிக்கு தேவைப்படும். 2004ல் ஆஸ்திரேலியா தொடரை வென்ற போது, சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன், முக்கிய பங்கு வகித்தார்.
ஆனால், இப்போதைய நிலையில் வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்துவர் எனத் தெரிகிறது. மொத்தத்தில், மந்தமான ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய பவுலர்கள் எப்படி செயல்பட போகின்றனர் என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளேன்.
சச்சினுக்கு மரியாதை:
ஒருநாள் போட்டிகளில் இருந்து சமீபத்தில் விடைபெற்றவர் இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் தான், அநேகமாக இவரது கடைசித் தொடராக இருக்கும் எனத் தெரிகிறது. உலக கிரிக்கெட்டில் இவருக்குள்ள மரியாதை என்றும் நிலைத்து இருக்கும்.
இவர் ஓய்வு பெற்றாலும், எங்கள் மக்களிடம் இருந்து எப்போதும் மரியாதை கிடைக்கும். சமீபத்தில் ஆஸ்திரேலிய அரசின் உயரிய "ஆர்டர் ஆப் மெரிட்' விருது வழங்கப்பட்டதே இதற்கு சாட்சி.
இவ்வாறு கில்கிறிஸ்ட் கூறினார்.
0 comments:
Post a Comment